பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

26


22-1-76 அன்று மணியம்மையார், எனக்குக் கேடயம் வழங்கினார்கள். பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் 15-9-79 அன்று கி. வீரமணி, எனக்குப் ‘பெரியார் பெருந்தொண்டர்’ பட்டயம் வழங்கினார்.

தமிழில் சுய சரித்திரமும், வாழ்க்கை வரலாறும் பெருமளவில் எழுதப்படலில்லை. வெளிவந்துள்ள சில நூல்களில் சாமி சிதம்பரனார் வரலாற்று எழுதிய “தமிழர் தலைவர்” மிகச் சிறந்த வாழ்க்கை நூலாகும். பெரியதொரு தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் என்பதோடு; ஒரு biography எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கும் அது மிகச் சரியான எடுத்துக்காட்டாகும். 40 ஆண்டுகட்கு முன்னர் அது எழுதப்பட்டதாயினும், அந்நூல் என்றுங் குன்றாத பொலிவுடன், கூடியதாகும். அதைப்போல இன்னொரு நூல், அதே தலைவரைப் பற்றி எழுத முடியுமா? என்ற அய்யமும் அச்சமும் என்னை ஆட்கொண்டன. அவர் எழுதி முடித்துள்ள காலமவரை என் எழுத்தைச் சுருக்கிக் கொண்டேன். பிறகுதான் விரிவாக நடந்தேன். சாமி சிதம்பரனார் எங்கள் மாவட்டத்துக்காரர், எனக்கும் அறிமுகமானவர். அவர் எழுத்து வழிகாட்டிற்று. அடுத்து, ‘இது பெரிய முயற்சி ஆயிற்றே; நம்மால் இயலுமா?’ என்ற தயக்கம் பிறந்த போது, திருச்சி நண்பர் வே. ஆனைமுத்து, மனக்கண்முன் தோன்றினார். திருச்சி சிந்தனையாளர் கழகச் சார்பில், அவர் தொகுத்துள்ள பெரியார் சிந்தனைகள் மூன்று பகுதியும், மாபெரும் சாதனையாகும். அவரை எண்ணியபோது மலைப்பு ஓரளவு நீங்கியது.

தன்னையீன்ற சின்னத்தாயம்மையார் மறைந்தபோது பெரியார் எழுதியுள்ள கட்டுரை, மிகச் சிறந்த வாழ்க்கை வரலாற்று இலக்கியம். பன்னீர் செல்வம், நாகம்மையார் மறைவின்போது தீட்டியவை, ஒப்பற்ற கையறு நிலை இலக்கியங்கள். அய்ரோப்பியச் சுற்றுப் பயணத்தின்போது அவர் எழுதி அனுப்பிய மடல்கள், தலை சிறந்த பயணக் கட்டுரைகள். இராமாயண ஆராய்ச்சி ஒன்றே அவருக்கு பி.எச்.டி வாங்கித்தர வல்லது. தாமே நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியவர். ‘இனிவரும் உலகம், தத்துவ விளக்கம்’ இரண்டும் ஆங்கிலத்தில் இருந்தால் நொபெல் பரிசு அவரைத் தேடிவந்திருக்கும். அவர் தீட்டிய தலையங்கம் அத்தனையும் ஈட்டியின் முனைகள். அவ்வளவு பெரும் எழுத்தாளர், தமது சுயசரித்திரம் எழுதாமல் விட்டதால், எனக்குக்கூட அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதக் கூடிய தைரியம் பிறந்து விட்டதல்லவா?

உலகத்திலேயே தன்னிகரற்ற சுயசிந்தனையாளர், பகுத்தறிவு ஊற்று, தீர்க்கதரிசி, பெரியார். நல்வாய்ப்பாக இவருக்கு ஆங்கிலம் தெரியாது. தெரிந்தால், இவர் கருத்துக்கள் இரவல் என்றும் சொல்ல, இங்கு ஆள் இருப்பர்! உலகத்தில் எத்தனையோ சிந்தனைச் செல்வர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். சொல்லாகவும் எழுத்தாகவும் தங்கள் அறிவுக் கருவூலத்தை அவர்கள் வழங்கியுள்ளார்கள். ஆனால், பெரியாரைப்-