பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

454

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


கிட்டாதிருந்த பெருவாய்ப்பை அளித்தது. அதாவது இதுவரை நடைபெற்றிருந்த சுயமரியாதைத் திருமணங்கள் அனைத்துமே செல்லுபடியாவதற்கு (With retrospective effect) இச்சட்டம் வழிவகுத்தது. பார்ப்பனரின் மதகுருத் தன்மை ஒழியவும், மூடச் சடங்குகள் அகலவும் வழிவகுத்து, உரிமையளித்த இச்சட்டத்தை நிறைவேற்றியதன் மூலமாகப், பெரியாரின் நீண்ட நாளையக் கனவை நனவாக்கினார். முதல்வர் அண்ணா. நாம் இருக்கின்ற காலத்துக்குள், நமக்குப்பின் வேறு யார் வந்து ஆண்டாலும் மாற்ற முடியாதபடி, சில நிலையான காரியங்களை, அவை மூன்று நான்காயிருந்தாலும்கூடப் போதும்! செய்து முடிக்க வேண்டும், என்று சொல்லிய வண்ணமே அண்ணா, தமிழ்நாடு பெயர் மாற்றம், சு.ம. திருமணச்சட்டம், பி. யூ.சி. வரை இலவசக் கல்வி ஆகிய திட்டங்களைக் கொண்டு வந்தார்.

கல்விக்கு நிறையச் செலவிடுவேன் என்ற அண்ணா கூற்றை, முதல் பக்க ஏழுகாலப் பெருஞ்செய்தியாக, 11.12.67 வெளியிட்டு, அடுத்த நாள் பாராட்டுத் தலையங்கமும் தீட்டியிருந்தது “விடுதலை” ஏடு. ஆனால், உலகத் தமிழ் மாநாடு சிறப்புடன் நடத்தப் போவதாக அண்ணா அறிவித்தது பெரியாருக்குச் சினத்தையே வரவழைத்தது! “உலகத் தமிழ் மாநாடாம் - வெங்காய மாநாடாம், இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது? காங்கிரசை விட இந்த மந்திரி சபை தேவலாம் என்கிறார்கள்; இந்த நேரத்தில் ஏன் இந்தக் கூத்து? கனம் அண்ணாதுரை 1972-ல் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்லி விடட்டும்!. உலகத் தமிழ் மாநாடு கூடிக் கலைந்த பின் சூத்திரன் சூத்திரனாகத்தானே இருக்கப் போகிறான்! இழிவு ஒழியப் போகிறதா? கண்ணகி சிலையும், கம்பன் சிலையும் எதற்கு? இவர்கள் நமது இனப் பெருமையை ஒழித்தவர்களல்லவா? தமிழர்களே! நம் எதிர் காலம் சுத்தத் தமிழில் இல்லை, ஆங்கிலம் கலந்தே பேசுங்கள்! தாயாரை மம்மி என்றே சொல்லுங்கள்“ என்றார் பெரியார் ஆவேசமாக. “அரசியல் சட்டப் பூச்சாண்டி என்னிடம் காட்ட முடியாது” என்றும் காட்டமாக 15.12. 67 அன்று எழுதினார்.

6.12. 67 விருதுநகரில், ஆசைத்தம்பி மகள் திருமணத்தில், சுயமரியாதைத் திருமணச் சட்டம் பெரியாருக்கே காணிக்கை என்றார் அண்ணா . டிசம்பரில் 7,8,9 மூன்று நாள் கூட்டங்கள் மழையால் ரத்தானது பெரியாருக்கு வருத்தந் தரும் செய்தி. 6.12.67 அன்று “கைத்தறித் தொழில் ஒரு நியூசென்ஸ்” என்று பெரிய தலையங்கம் விவரமாக எழுதினார். “கைத்தறியாளரின் வாழ்க்கை நிலை, அவர்கள் குடும்பத்திலுள்ள குழந்தை குட்டி முதல் அனைவரும் ஒவ்வொரு வகையில் பாடுபட்டும், தரித்திரம் தான்? அவர்களில் பலரும் உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்காததால் பிச்சை எடுக்கக்