பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ix

அய்யா அவர்களே இப்படிச் சொல்லி விட்டதனால்தானோ என்னவோ, நான் முதன்முதலாக இந்த உரை நடை நூலை எழுதத் துணிந்தேன்! ஏனெனில், என்னுடைய பூக்காடு, கனியமுது, சுமைதாங்கி, அண்ணா காவியம் ஆகியவை கவிதை நூல்களாகும். இந்த முதலாவது உரை நடை நூலிலும், என்னுடைய நடை என்பதாக எதையும் கையாள இயலவில்லை! அய்யாவைப் பற்றிய நூலாகையாலும், அய்யாவின் உரைகளை அப்படியே எடுத்தாள வேண்டியிருப்பதாலும் நான் எனக்கென ஒரு தனி நடையையோ, கருத்தையோ இங்கு வெளிப்படுத்திட வாய்ப்பில்லை.

அண்ணாவோடு நான் பழகியதற்குக் காணிக்கையாகச் சிறு நூலாயினும் முழுநூலாகவும், அண்ணாவுக்கு என் கவிதைகளில் இருந்த ஈடுபாடு காரணமாகக் கவிதை நூலாகவும் அண்ணா காவியம் இயற்றினேன். கலைஞர் வெளியிட்டார். தமிழகத்துப் பல்துறைச் சான்றோரும் ஆன்றோரும் ஏராளமாக அதைப் பாராட்டி முடித்து விட்டனர்.

என் இயல்பின்படி அய்யாவுக்கும் "பெரியார் காவியம்" என்ற கவிதை நூலினைத்தான் இயற்ற எண்ணி, ஒரளவு தொடக்கமும் செய்திருந்தேன். இந்நிலையில் ஓர் நாள், என் நண்பர் மூவேந்தர் அச்சக உரிமையாளர் முத்து, என்னைத் தொலை பேசியில் அழைத்துப் "பெரியார் வரலாற்றை நீங்கள் உரை நடையில் எழுதினால் பொருத்தமாயிருக்குமே! நண்பர் பி. எல். ராஜேந்திரனும் அப்படியே செய்யச் சொல்லி உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார். அதையும், இந்தப் பெரியார் நூற்றாண்டு விழா நிறை விலேயே முடித்தால் நலமாயிருக்கும்" என்றார். இவர்கள் என் நலம் நாடுவோராதலின், தயக்கத்துடனேயே ஒத்துக் கொண்டேன்.

புத்தகத் துறை வித்தகரான என் உழுவலன்பர் ஒருவர் இக்கருத்தை ஆதரித்தார். துணிந்து விட்டேன். அவர் பல அரிய ஆலோசனைகள் வழங்கினார். அவ்வாறே, வாழ்க்கை