பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiv

யுறுத்த முடியும்; ஆனால், ஒரு வாழ்க்கை வரலாற்று ஆசிரியரால் இது இயலாது! தனக்குக் கிடைக்கும் எல்லா விதமான செய்திகளையும் திரட்டித், தன் நூலின் நாயகரின் உண்மையான குண நலன்கள் வெளியிடப்பட, எதையும் குறைத்தோ மறைத்தோ திரித்தோ கூட்டியோ கழித்தோ கூறாமல், அன்னாரின் பண்புகளைப் பிறர் அறிந்திடும் ஆர்வம் மிகுந்திட, மெய்யை உணரும் ஆவல் நிறைந்திடச், சுவை குன்றாது, அழகுடன் அமைத்துத் தரவேண்டும்.

அய்யாவோ நம் கண்முன் வாழ்ந்தவர். மூன்று தலைமுறையினர் அவரை முழுமையாய் அறிவர். வாழ்க்கையில் இரகசியமே கிடையாது. அவர் பேச்சில்-எழுத்தில் தெளிவின்மையோ, குழப்பமோ, இருபொருள் தரும் தன்மையோ (ambiguity) இருப்பதில்லை. மூடிமறைத்துப் பேச அவர் அறியார். எல்லாமே வெளிப்படை. அச்சம் தயை தாட்சண்யத்துக்கு அப்பாற்பட்டவர். காலமெல்லாம் தாம் செய்வது நன்றி கிட்டாத பணி மட்டுமல்ல; யாருக்காகப் பாடுபடுகிறோமோ அவர்களே உண்மை புரியாமல் எதிர்க்கக் கூடிய பணி-என்பது நன்கு தெரிந்திருந்தும், அதனையே தொடர்ந்து ஆற்றி வந்தவர்.

அதனால், அவரைப்பற்றி எழுதவரும் போதே, சிலரது வெறுப்போ மறுப்போ எதிர்ப்போ ஏளனமோ வரவேற்கும் என்பது தெரிந்தே தொடங்கினேன். நானும் நன்றி கிட்டாப் பணிசெய்ய அவரிடமே நன்கு பயின்றவனல்லவா? பெரியார் வரலாறு எழுதுகிறேன் என்று கேள்விப்பட்டதிலிருந்து பல நல்லெண்ண நண்பர்கள் எனக்குப் பாராட்டும் ஊக்கமும் நல்கினர். என் வறிய நிலை புரிந்தோர், தனிப்பட்ட, சொந்த முறையில் பதிப்பித்து, வெளியீடும் செய்கிறேன் என்றதும், வியந்தனர்.

பெரியார் வாழ்க்கை வரலாறு எழுதியதால், என்னை தமிழ்நாட்டுஜேம்ஸ் பாஸ்வெல் என்று கருதிக்கொள்ள இடமுண்டு; எனினும், நான் அதற்கு ஒப்பவில்லை. காரணம் நான் பாஸ்வெல் ஆனால், தந்தை பெரியார் டாக்டர் சாமுவெல் ஜான்சன் ஆகவேண்டுமே! ஜான்சன் ஆங்கில