பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XV

இலக்கியத்துறை ஒன்றில் மட்டும் நிகரற்ற மேதை. தந்தை பெரியாரோ அனைத்துத் துறைகளிலும் ஒப்பாரும்மிக்காரும் அற்ற சுயசிந்தனைப் பகுத்தறிவுச் சுரங்கம். அவரோடு ஒப்பிட்டுச் சொல்லத் தக்கவர் உலகில் யாருமிலர். எனவே பெரியாரின் தொண்டனாக இருந்தே இந்த எழுத்துப் பணியினை நிறைவேற்றியுள்ளேன்.

சென்னை வானொலி நிலையத்தில் 17-9-1978-ல் "பெரியார் ஈ.வெ.ரா. வின் சமுதாய சீர்திருத்தப் பணிகள்" என்ற தலைப்பில் 4 நிமிடங்கள்; 9-5-1979-ல் "பெரியாரின் இதயப் பாங்கு" எனுந் தலைப்பில் 12 நிமிடங்கள் பேசவும்; 24-12-1979-ல் "பெரியார் கண்ட சமுதாயம்" என்கிற தலைப்பின் கீழ் 20 நிமிடங்கள் கலந்துரையாடவும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது, (வானொலிக்கு நன்றி). தஞ்சையில், திராவிடர் கழகம் நடத்திய பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவின் முதல் நாள், 15-9-1979 அன்று, என் முன்னிலையில் கவியரங்கம் நடைபெற்றது.

அச்சுக்குப்போகும் வரையில் "தந்தை பெரியார்" நூலின் கையெழுத்துப் பிரதிகளை நான் யாருக்கும் காட்ட விரும்பவில்லை. எனக்கு அய்யமேற்படுங்கால், நினைவாற்றல் மிக்க நண்பர் என்.எஸ். சம்பந்தம் அவர்கள் துணையை நாடினேன். அவரும் மனம் உவந்து உதவினார். அச்சாகத்தொடங்கியதும், காகிதம் ஒரேமாதிரி கிடைக்காத பிரச்சினை. காத்திருப்பதால் பயனில்லை என்று கிடைத்த காகிதத்தில் அச்சியற்றினேன்.

அய்யாவின் அழகான transparency படம் ஒன்றை என் அருமை நண்பர் வழங்கினார். அதை முகப்பாக வைத்துத் தமது திறமையான ஒவியக் கோலங்களால், அட்டையினை அலங்கரித்திட, ஓவிய நிபுணரும் என் இனிய நண்பருமான கோபுலு கனிவு காட்டினார். அனுபவசாலிகளான சில நல்ல தோழர்கள்-அவர்கள் பெயரைக் குறிப்பிடுவது அவர்களுக்கே தீங்காக முடியலாம்!-அவ்வப்போது ஏற்ற யோசனைகள் அளித்தனர்.