பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்ப்பானுடைய அடிமைகளோ வந்து உட்கார்ந்தால் இவை எல்லாம் செய்வார்களா? தோசையைத் திருப்பிப்போடுவதுபோல் காமராசர் செய்த நன்மைகளை எல்லாம் மாற்றிவிடுவார்கள்.

(vi) இன்று மந்திரிசபை ஒரு தமிழன் கையில் இருக்கின்றது. அதுவும் தமிழன் நலனில் அக்கறை கொண்ட கீழ்ச்சாதி ஆள் கையில் இருக்கின்றது. அதன் காரணமாக ஆதரிக்கின்றேன். இது போய்விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

(vii) எங்கள் கொள்கையை நிறைவேற்றிக் கொள்ளக் காமராசரை ஆதரிப்பதும் பல திட்டங்களில் ஒன்றேயாகும்.

(viii) 100க்குப் 15 பேர் படித்தவர்கள் உள்ள நிலையில் ஆச்சாரியார் பதவிக்கு வந்து அதை 10ஆகக் குறைக்கப் பாடுபட்டார்.[குறிப்பு 1] பல பள்ளிகளை மூடினார். காமராசர் பதவிக்கு வந்த 7 ஆண்டுக்காலத்தில் ஆசாரியர் மூடியபள்ளிகளை எல்லாம் திறந்ததோடு அதற்கு மேலும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை ஏற்படுத்தி நிலையை மாற்றி இப்பொழுது 100க்கு 35 பேர் படிக்கும் நிலையை உண்டாக்கினார்.

(ix) நேருவின் தொண்டைத்தொடர்ந்து செய்யக் காமராசர் இருக்கிறார். நேரு அவர்கள் விட்டுச் சென்ற காரிய்ததைக் காமராசர் எடுத்துச் செய்வார். அவரும் நேருவைப் போன்று அவ்வளவு விளம்பரம் இல்லாவிட்டாலும் நமது நாட்டைப் பொறுத்தவரையில் அவர் ஒரு பெரியதியாகி ஆவார்.

(x) தமிழ் நாட்டின் வரலாற்றில் ஏன் இந்தியாவின் வரலாற்றில் காமராசரின் காலம் ஒரு குறிப்பிடத்தக்க “சுந்தரகாண்டப்” பொற்காலம் அரசியலில் ஆகும். இன்று இந்திய அரசியலில் காமராசருக்கு நிகர், அடுத்த இரண்டாவது மூன்றாவது நபர் யார் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஓர் உச்சநிலை பெற்ற காலமாகும்.

(xi) காமராசரின் சமதர்மத்திட்டத்தால் இன்று ‘கோயில் இல்லாத ஊரில் குடியிராதே’ என்னும் முட்டாள்தனமான பழமொழி மறைந்து ‘பள்ளி இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா’ என்ற புதிய நீதிமொழி ஏற்பட்டுள்ளது.


  1. 1952 இல் காங்கிரசு தோற்று ஆட்சி அமைக்கவில்லை. எதிர்க்கட்சிகளிலும் சரியானநிலை இல்லை. காங்கிரசு இராஜாஜியை அழைத்து ஏற்பாடு செய்யச் சொல்லியது. அவர் சில எதிர்க் கட்சிகளின் உறுப்பினர்களை Associate member (Congress) ஆக்கி, அவர்கட்குப் பதவிகள் கொடுத்து ஆட்சி அமைத்தார். அந்தக் காலத்தில்தான் மாணிக்கவேல் நாயக்கர் சட்டமன்றத்தலைவர் (Speaker) ஆனார்.