பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

போக்காக உள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் திங்களின்போது இவ்விடங்களில் எங்குப் பார்த்தாலும் போட்டிப் பந்தயங்கள் நடைபெறும். அடுத்தடுத்து வரும் குன்றுகளிடையே, வளைந்து வளைந்து செல்லும் பாதைகளில் கவலையின்றி நடந்து திரிவதும் ஈடற்ற இன்பமே.

திரு. வென்லாக் பிரபு (Lord Wenlock) சென்னை மாநில ஆளுநராகப் பணியாற்றிய போது, இவ்வெளிகளின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் பாடுபட்டார். ஆகையினாலேயே இவ்வெளிகள் அவருடைய பெயரை முன்னே கொண்டு 'வென்லாக் வெளிகள்' (Wenlock Downs) என்று வழங்குகின்றன. உதகமண்டலத்திலுள்ள எல்லா முக்கிய உணவு விடுதிகளிலிருந்தும் இவ் வெளிகளை எளிதில் சென்றடையலாம். உணவு விடுதிகளிலிருந்து புறப்பட்டு 1 அல்லது 1½க்கல், வெஸ்ட்பரி பாதையில் செல்ல வேண்டும். உதகையிலிருந்து கிளம்புவோர் பாதையை அடைந்து ஃபிங்கர் போஸ்ட் (Finger Post) டை நோக்கிச் சென்றால் இவ்வெளிகளைச் சீக்கிரம் அடையலாம், கை விரல்களை விரித்து வைத்தாற்போல் ஐந்து பாதைகள் பிரிந்து செல்வதால் இவ்விடம் ஃபிங்கர் போஸ்ட் என்று பெயர் பெற்றது.

ஏரி :

உதக மண்டலத்தில் அமைந்துள்ள ஏரி சிறியது. இது செயற்கை ஏரி என்பதை எல்லாரும் அறிவர். ஆனால் இதைக் காண்போர் இயற்கையாக அமைந்துள்ள எழில் மிக்க ஏரி என்றே எண்ணுவர். இதன் சுற்றளவு இரண்டு கல் இருக்கும். முதன் முதலாக இவ்வேரியின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டியவர் திருவாளர் சல்லிவன் துரை. இவ்வேரியின் நீரைப் பயிர்த் தொழிலுக்குப் பயன்படுத்த முதலில் எல்லாரும் எண்ணினர். சிறிது சீர்திருத்தப்பட்டதும் இது கண் கவரும் வனப்போடு காட்சியளித்ததால், அழகுக்காகவே