பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

யில் பக்கங்களிலுள்ள தொடர்களோடு தலை நிமிர்ந்து நிற்கும் சிகரங்கள், காளையர்கள் பலர் தம் வலிமிக்க தோள்களை உயர்த்திக்கொண்டு நிற்பது போல் தோன்றும். நடுப்பகல் நேரத்தில் மற்ற மலைகளைத் தன் செம்மாந்த உயரத்தால் இருளில் ஆழ்த்திவிட்டு ஒளியுடன் திகழும், மாலை நேரத்தில் கதிரவனின் செந்நிறக் கிரணங்களைப் போர்த்துக்கொண்டு ஈடில்லாப் பெருவனப்போடு திகழும். பெருமழை பெய்து ஓய்ந்த சமயத்தில் இதன் உயரிய சிகரங்கள் மேகங்களாகிய முடியைத் தலையில் சுமந்துகொண்டு, பெருஞ் சிறப்போடு நிற்கும் பேரரசைப்போல் காட்சியளிக்கும். இதன் சரிவுகளில் இழிந்து சலசலத்து ஓடி வரும் நீர் அருவிகளின் மீதும், எக்காளமிட்டுத் தாவி வரும் நீர் வீழ்ச்சிகளின் மீதும் தங்கக் கதிரோன் தன் தணற் குழம்பைப் பூசி மகிழும்போது, பசுமையும் நீலமும் மாறி மாறிச் சுடர்விடும்.

ஆறுகள் :

மதுரை மாவட்டத்தின் வட பகுதியில் உள்ள பழனி, திண்டுக்கல் வட்டங்களிலுள்ள செம்மண் நிலத்தில் சம தூரங்களில் பாயும் நான்கு ஆறுகளும் பழனி மலையிலேயே தோன்றுகின்றன. கொடவனாறு, நங்காஞ்சி ஆறு, நல் தங்கியாறு, சண்முக நதி என்பவையே அவை. இந்நான்கும் காவிரியின் துணை நதியான அமராவதியில் கலக்கின்றன. பழனியில் பெருமழை பெய்த காலங்களில் இவ்வாறுகளிலும் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்படும். சில நாட்களில் அப் பெருக்குத் தணிந்து, சிற்றோடையாகக் காட்சி தரும். இந்நான்கு ஆறுகளில் மிகவும் பயனுடையது சண்முக நதியாகும். வில்பட்டி, பூம் பாறைப் பள்ளத்தாக்குகளில் வழியும் நீரைப் பெற்று இது ஓடி வருகிறது. இப்பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள ஆறு பிரிவான படுகைகளில் இழிந்து வரும்