பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

அத் தென்பக்கப் பீட பூமியிலேயே, கோக்கர் நடை வெளியிலிருந்து 3 கல் சென்றால் தூண் பாறைகளைக் காணலாம். மூன்று உயரமான பருத்த பாறைகள் பெரும் பெரும் தூண்களைப்போல் உயர்ந்து நிற்கின்றன. இவைகளின் உயரம் ஏறக்குறைய 400 அடி இருக்கும். இவற்றின் நடுவிலும் அடியிலும் பல குகைகளும், பிளவுகளும் அமைந்துள்ளன. இப் பாறைகளின் உச்சியிலிருந்து காண்போருக்கு அதிகமலையின் அழகிய காட்சிகளும், கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து உயர்ந்து செல்லும் செங்குத்துச் சரிவுகளும், சம வெளியும் நன்கு தெரியும்.

தூண் பாறைகளிலிருந்து இரண்டு கல் தொலைவில் டாக்டர்ஸ் டிலைட் {Doctor's Delight) என்ற உயர்ந்த மேடு ஒன்று உள்ளது. இது தூண் பாறைகளைவிட மிகுந்த பேரழகோடு விளங்குகின்றது. கோடைக் கானலிலிருந்து 9½ கல் தொலைவில் 'ஹேமில்டன் கோட்டை ' (Fort Hamilton} உள்ளது. மேஜர் டக்ளஸ் ஹேமில்டன் என்பவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. சென்னை மாநிலத் தலைவராக விளங்கிய சர் சார்லஸ் டிரெவெல்யான் என்பவரின் ஆணையின்படி இவர் கி. பி. 1859, 1861; 1862 ஆகிய ஆண்டுகளில் பழனி மலையில் தங்கி, அதன் நிலப்படத்தை வரைந்தார். அப்படம் விளக்கமாகவும், பெரிதாகவும் உள்ளது. பொது நூலகங்களிலும், அலுவலகங்களிலும் இப் படம் தொங்கிக் கொண்டிருக்கின்றது. பழனி மலையைப் பற்றி அவர் எழுதிய இரண்டு குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை. அவை முறையே கி. பி. 1862-ஆம் ஆண்டிலும் கி. பி. 1864-ஆம் ஆண்டிலும் சென்னையில் அச்சியற்றி வெளியிடப்பட்டன. ஹேமில்டன் கோட்டை என்று குறிப்பிடப்படும் இடத்தில் கோட்டை எதுவுமில்லை. ஒரே ஒரு குடிசைதான் உள்ளது. அவ்விடம் முதலில் ஒரு பெரிய ஏரியாக இருந்தது என்ற சுவையான உண்மை