பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

265

சமய வாழ்வு :

கோடைக்கானலின் சமய வாழ்வு குறிப்பிடத்தக்கது. பல சமயத்தாரும் இங்கு உறவுகொண்டு அன்போடு வாழ்கின்றனர். இங்குள்ள பசுமையான இளமரக்காடுகளும், தேனினுமிய தீஞ்சுவை அருவிகளும், கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் நீர் வீழ்ச்சிகளும், பசுமையான குன்றுகளும், மெல்லென அசைந்தாடும் தென்றலும், கோடைக்கானலில் ஓர் இன்ப அமைதியைச் சூழவிடுகின்றன. கோடைக்கானல் பல நாட்டு மக்களுக்கும் ஒரு தங்கல்மனை போன்றது. ஸ்காட் மக்களுக்கு அவர்கள் தாய் நாட்டிலுள்ள மலைகளையும், நீர்வீழ்ச்சிகளையும் இவ்வூர் நினைவூட்டுகிறது : ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்திலுள்ள யார்க்ஷைர் வெளியை நினைவூட்டுகிறது. பருவக் காற்றினால் அசைந்தாடும் நீலப் பிசின்மரங்கள் ஆஸ்திரேலியருக்கு அவர்கள் அன்பு நாட்டை நினைவூட்டுகின்றன. வானளாவி நிற்கும் செங்குத்தான மலைச்சரிவுகள், ஸ்வீடன் மக்களுக்கும், டேனியர்களுக்கும், ஸ்காண்டிநேவியா தீபகற்பத்தை நினைவூட்டுகின்றன. இங்குள்ள நீல நிறமான மலைத்தொடர்கள் அமெரிக்கரின் உள்ளத்தில் அவர்கள் தந்தையர் நாட்டைப்பற்றிய இன்ப நினைவுகளை எழுப்புகின்றன. தமிழர்களுக்கோ, இலக்கியத்தில் மிளிரும் குறிஞ்சித் திணை இன்னகை காட்டி எதிரில் நடம்புரிகின்றது.

பிராஸ்பெக்ட் பாயிண்டின் கடைசியில் பெருமாள் மலையைப் பார்த்தாற்போன்று, தமிழரின் குறிஞ்சிக் கடவுளான முருகனின் கோவில் அமைந்துள்ளது. இது திருவாளர் இராமநாதனின் நினைவுச் சின்னமாக அவருடைய ஆஸ்திரேலிய மனைவியால் கட்டப்பட்டது. இக்கோவில் அந்த அம்மையாரின் மேற்பார்வையிலேயே இன்றும் உள்ளது. கோடைக்கானலிலிருந்து இக்கோவிலுக்குச் செல்லும் பாதை