பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

zஊரும் பேரும்


பல்லவனே .வயிரமேகன் என்னும் விருதுப் பெயர் தாங்கி விளங்கினான் என்று சரித்திர நூலோர் கருதுவர்.தென்னார்க்காட்டுத் திண்டிவன வயிர மேகன் வட்டத்திலுள்ள வயிரமேகபுரம் என்னும் ஊர் அவன் பெயரை விளக்குகின்றது.அவ்வூர் வயிர மேக நகரம் என்று ஒரு சாசனத்திற் குறிக்கப் படுதலால் அதன் பண்டைச் சிறப்பினை ஒருவாறு அறியலாகும். இடைக் காலத்தில் ஜனநாதபுரம் என்ற பெயரும் அதற்கு வழங்கலாயிற்று. இக்காலத்தில் வயிரபுரம் என்பது அதன் பெயர்.

சோழ நாட்டு மன்னர்

விசயாலயன்

பல்லவர் ஆட்சி நிலை குலைந்தபோது தஞ்சைச் சோழர் குலம் தலையெடுத்தது. வடக்கே சாளுக்கிய மன்னரும், தெற்கே பாண்டியரும் பல்லவ வேந்தனை நெருக்கிக் குழப்பம் விளைத்த காலம் பார்த்து விசயாலயன் என்னும் சோழன் முத்தரையரிடமிருந்து தஞ்சை நகரைக் கைப்பற்றினான். அது முதல் அவன் மரபில் வந்த தஞ்சைச் சோழர்கள் படிப்படியாக வளர்ந்தோங்கிப் பேரரசர் ஆயினர்.விசயாலயன் பெயர் தாங்கிய ஊர் ஒன்றும் இல்லையென்றாலும் புதுக்கோட்டையைச் சார்ந்த நாரத்தா மலை மீதுள்ள விசயாலய சோழிச்சரம் என்னும் கற்கோயில் அவன் பெயரால் அமைந்ததென்பர்.

ஆதித்தன்

விசயாலயனுக்குப் பின்பு அவன் மகன் ஆதித்தன் அரசுரிமை பெற்றான். ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பல்லவர் பெருமைக்கு உறைவிட மாயிருந்த