பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

ஊரும் பேரும்


கோட்டாறு

திருநள்ளாற்றுக்கு அணித்தாக உள்ளது கோட்டாறு. “தேனமரும் மலர்ச் சோலை திருக்கோட்டாறு” என்று திருஞானசம்பந்தர் பாடியிருத்தலால் அப் பதியின் செழுமை இனிது விளங்கும்.4

திருவையாறு

தஞ்சாவூருக்கு வடக்கே ஏழு மைல் அளவில் உள்ள பழம்பதி திருவையாறாகும். பஞ்சநதம் என்னும் வடமொழிப் பெயரும் அதற்குண்டு.5 தேவாரம் பாடிய மூவரும் திருவையாற்றைப் போற்றி யுள்ளார்கள். சஞ்சலம் வந்தடைந்த பொழுது “அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில்” திரு ஐயாறு என்றார் திருஞான சம்பந்தர். “செல்வாய செல்வம் தருவாய் நீயே, திருவையா றகலாத செம்பொற் சோதீ” என்று போற்றினார் திருநாவுக்கரசர். “அழகார் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய அடிகளோ என்றழைத்துத் தொழுதார் சுந்தரர். காவிரிக் கோட்டம் என்று விதந்துரைக்கப் பெற்றதனாலும் ஐயாற்றின் பெருமை விளங்குவதாகும்.6

தெள்ளாறு

வட ஆர்க்காட்டு வந்தவாசி வட்டத்தில் தெள்ளாறு என்னும் ஊர் உள்ளது. பல்லவ மன்னனாகிய நந்திவர்மன் காலத்தில் தெள்ளாற்றில் நிகழ்ந்த பெரும் போர் நந்திக் கலம்பகத்தில் பாராட்டப் பட்டுள்ளது. பாண்டியனது பெருஞ்சேனையைத் தெள்ளாற்றில் வென்றுயர்ந்த பல்லவன் பாட்டுடைத் தலைவனாயினான்; தெள்ளா றெறிந்த நந்தி என்று புகழப்பெற்றான்; இங்கினம் பல்லவ