பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும் 203


திருச்சி வட்டத்தில் உள்ளது. திருச்செந்துறை. ஈசான மங்கலத்திற்கு அருகேயுள்ள அச் செந்துறையில் சந்திர சேகரப் பெருமானுக்குத் தென்னவன் இளங்கோ வேளாளரின் திருமகள் கற்கோயில் கட்டிய செய்தி சாசனங்களிற் காணப்படுகின்றது.15

காவிரியின் வடகரையிலுள்ள திருப்பாற்றுறை திருஞானசம்பந்தரால் பாடப் பெற்றுள்ளது. அங்குள்ள ஆதிமூலநாதர் ஆலயத்திற் கண்ட சாசனங்களால் திருப்பாற்றுறை, உத்தம சீலி சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்திருந்ததென்பது விளங்கும்.16 இப்பொழுது உத்தமசேரி என வழங்கும் ஊரே உத்தம சீலி என்பர்.

திருப்பாற்றுறை

இறைவனது அளப்பருங் கருணையைப் பேரின்ப வெள்ளமாகக் கண்டனர் ஆன்றோர். “சிவபோகம் என்னும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய், ஏகவுருவாய்க் கிடக்குதையோ என்று பரிந்து பாடினார் தவ நெறியில் தலைநின்ற தாயுமானவர். வெள்ளம் பொங்கிப் பொழிந்து செல்லும் கங்கை, காவிரி முதலிய ஆறுகளில் துறையறிந்து இறங்கி நீரைத் துய்த்தல் போன்று, சான்றோர் கண்ட துறைகளின் வாயிலாக ஆண்டவன் அருளைப் பெறலாகும் என்னும் கருத்தால் ஆலயங்களைத் துறைகள் என்று மேலோர் குறித்தனர் போலும்! அவற்றுள் சில துறைகள் பாடல் பெற்றனவாகும். பண்டு எழுவர் தவத்துறையாய் விளங்கிய லால்குடியின் தன்மையையும், மாணிக்கவாசகர்க்கு ஈசன் இன்னருள் சுரந்த திருப்பெருந் துறையின் செம்மையையும் இன்னோரன்ன பிற துறைகளையும் முன்னரே கண்டோம். இனிச் சாசனங்களிலும்