பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

365


என்பான் நாற்பத் தெண்ணாயிரப் பெரும் பள்ளிக்கு வழங்கிய வரிக் கொடையும் சாசனத்திற் கூறப்படுகின்றது. இக்குறிப்புக்களால் நறுங் கொண்டை என்னும் பதி சமணர்களாற் பெரிதும் போற்றப்பட்ட தென்பது புலனாகும்.

சீனாபுரம்

கொங்கு மண்டலத்துக் குறுப்பு நாட்டில் உள்ள சனகை என்ற சனகாபுரம் சமணர்க் குரிய சிறந்த பதிகளுள் ஒன்று. நன்னூல் என்னும் தமிழ் இலக்கண நூல் இயற்றிய பவணந்தி முனிவர் அவ்வூரிலே பிறந்தவர். ஆதிநாத தீர்த்தங்கரருக்கு அங்கு ஒரு கோயில் உண்டு. இந்நாளில் சீனாபுரம் என வழங்கும் அவ்வூர் கோவை நாட்டு ஈரோடு வட்டத்தில் பெருந்துறைக்கு அருகேயுள்ளது.

அம்மணம்பாக்கம்

அருக தேவன் பெயர் தாங்கி நிலவும் ஊர்கள் தமிழ் நாட்டிற் பல பாகங்களில் உண்டு. தென் பாண்டி நாட்டில் அருகன் குளம் என்னும் ஊர் உள்ளது. சேலம் நாட்டில் அருக நத்தம் என்பது ஓர் ஊரின் பெயர்.

அருக சமயம் தமிழ் நாட்டில் சமணம் என்றும், அமணம் என்றும் பெயர் பெற்றது. அமணம் என்பது அம்மணம் எனவும் வழங்கலாயிற்று. தொண்டை நாட்டிலும் அதை அடுத்துள்ள நாடுகளிலும் அம்மணம் என்னும் பெயருடைய சில ஊர்கள் காணப்படுகின்றன. செங்கற்பட்டு வட்டத்தில் அம்மணம்பாக்கம் என்ற ஊரும், மதுராந்தக வட்டத்தில் மற்றோர் அம்மணம் பாக்கமும் உண்டு. தென் ஆர்க்காட்டுத் திண்டிவன வட்டத்தில் பிறிதோர் அம்மணம்பாக்கம் உள்ளது. விழுப்புர வட்டத்தில்