பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

ஊரும் பேரும்

கோளுர் எனவும், மற்றொரு பாகம் மகோதைப் பட்டினம் எனவும் வழங்கலாயின.

பாண்டி நாட்டில் காயல் பட்டினம், குலசேகர. பட்டினம் முதலிய கடற்கரைப் பட்டினங்கள் உள்ளன. காயல் பட்டினத்தில் இந் நாளில் மகமதியரே பெரும்பாலும் வாழ்ந்து வருவதால் சோனகர் பட்டினம் என்றும் அதனைச் சொல்வதுண்டு. உப்பு வாணிபம் அவ்வூரில் சிறப்பாக நடைபெறுகின்றது. குலசேகர பாண்டியன் பெயரைக் கொண்டு விளங்கும் ஊர்களில் ஒன்று குலசேகரப் பட்டினமாகும். சோழ மண்டலக் கரையில் சதுரங்கப் பட்டினம் என்னும் சிறிய துறைமுகம் உள்ளது. அது பாலாறு கடலிற் சேருமிடத்திற்குச் சிறிது வடக்கே அமைந்திருக் கின்றது. சதுரை என்பது அவ்வூர்ப் பெயரின் குறுக்கம். அதனை ஐரோப்பிய நாட்டார் சதுராஸ் என்று வழங்கினார்கள்.

பாக்கம்

கடற்கரைச் சிற்றுார்கள் பாக்கம் என்று பெயர் பெறும். சென்னை மாநகரின் அருகே சில பாக்கங்கள் உண்டு. கோடம் பாக்கம், மீனம் பாக்கம், வில்லி பாக்கம் முதலிய ஊர்கள் நெய்தல் நிலத்தில் எழுந்த பாக்கம் குடியிருப்பேயாகும். சில காலத்திற்கு முன் தனித் தனிப் பாக்கங்களாய்ச் சென்னையின் அண்மையிலிருந்த சிற்றுார்கள் இப்போது அந்நகரின் அங்கங்க ளாய்விட்டன. புதுப் பாக்கம், புரசை பாக்கம், சேப் பாக்கம், நுங்கம் பாக்கம் முதலிய ஊர்கள் சென்னை மாநகரோடு சேர்ந்திருக்கின்றன.