பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

ஆகவே, திருமாவளவன் என்பது ஒருவனின் இயற்பெயர் அன்று. வளவன் என்பதே இயற்பெயர். திரு-மா-இரண்டும். வளவனுக்குப் பெருமை சேர்க்க, அச்சொல்லோடு இணைக்கப்பட்ட அடைச் சொற்களே எனக் கூறியிருப்பதன் மூலம், திருமாவளவன் என்ற பெயருடையான் ஒருவனும் இருந்திலன் என வாதிடுகிறார்.

இவ்வாதத்தில் வலிவு இல்லை, அது எப்படியாயினும், இதில் நச்சினார்க்கினியரை ஏற்றுக் கொள்ளும் பேராசிரியர் இராமச்சந்திரன் அவர்கள், பொருநராற்றுப்படை ஈற்றிலும், பட்டினப் பாலை ஈற்றிலும், முறையே, சோழன் கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படை' என்றும்,சோழன்கரிகாற்பெருவளத் தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப் பாலை என்றும் கூறிப், பொருநராற்றுப்படை பாட்டுடைத் தலைவன் கரிகால் வளவனும்88 பட்டினப்பாலை பாட்டுடைத் தலைவன் திருமாவளவனும்89 ஒருவனே என்பது உறுதிபடக் கூறியிருப்பதையும் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அதுவே வாதமுறை.

ஆக, கரிகாலனும், திருமாவளவனும் ஒருவர் அல்லர், வேறு வேறு பட்டவரே என்ற தம் வாதத்தை வலியுறுத்த பேராசிரியர் சி. ஈ. இராமச்சந்திரன் அவர்கள் எடுத்து வைத்த காரணங்கள் எவையும் வாதநெறியோடு பட்டன அல்ல. ஆகவே, பொருநராற்றுப் படைக் கரிகால்வளவனும், பட்டினப்பாலை, சிலப்பதிகாரத் திருமாவளவனும், ஒருவனே. சிலப்பதிகாரக் காலத்துக்கு முற்பட்டவனே என்பது உறுதி ஆகிவிட்டது.

இது, உறுதியாகிவிடவே, தம் கட்டுரையின் ஈற்று இரு பத்திகளில், அவ்விருவர்களில், யார் முந்தியவர் என்ற ஆராய்ச்சியில் இறங்கி, திருமாவளவனே முந்தியவன் என முடித்திருக்கும். முடிபு90 குறித்து ஏதும் கூறத் தேவையில்லை என்பதால் கூறினேன் அல்லன்.