பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

விட்டு,14 அக்கொளுக்கள், வரலாற்றுச் சான்றுகளாக ஏற்கும் தகுதியுடையவல்ல என முடிந்த முடிவாக முற்றுப் புள்ளியும் வைத்து விட்டார் திருவாளர். பி டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள்.15

கொளுவிற்கும், விளக்க உரைக்கும், அவர் விதித்த காலத்திற்கான அடிப்படைச் சான்று எதுவும் காட்டாத அவர், கொளு, வரலாற்றுச் சான்று ஆகாது, என்ற தம் முடிவிற்கு ஆதாரம் காட்ட, தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றுார் கிழார் பாடும் புறம் 76, 77 பாக்களையும், சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்து தண்ணிர் தா என்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக் கொண்டிருந்து ஆண்ணாது பாடியதான சேரமான் கணைக்கால் இரும் பொறையின் புறம் 74 பாட்டையும், சிறு குடி கிழான் பண்ணனைப் பாராட்டும் கிள்ளிவளவன் பாடிய புறம் 173, பாட்டையும், சோழன் நலங்கிள்ளியுழை நின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, ஒற்று வந்தான் என்று கொல்லப் புக்குழிப் பாடியதாகக் கூறும், கோவூர் கிழாரின் புறம் 147 பாட்டையும், எடுத்துக் கொண்டு திறனாய்வு செய்துள்ளார்.16

திருவாளர் அய்யங்கார் அவர்கள் கூறுவது போல், புறநானூற்றுக் கொளுக்கள், வரலாற்றுச் சான்றுகளாக ஏற்கும் தகுதியடையவல்ல எனத் தள்ளிவிடத் தக்கன. வல்ல; மாறாக, நற்றிணை, குறுந்தொகை, நெடுந் தொகை, புறநானூறு ஆகிய நான்கு தொகை நூல்களிலும் உள்ள 1600 பாக்களிலும் கிடைக்கும் வரலாற்று மூலங்கள் அனைத்தையும் நுண்ணிதின் ஆராய்ந்து கொண்ட உண்மை முடிவுகளின் தொகுப்பே ஆகும்.