பக்கம்:தமிழக வரலாறு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

தமிழக வரலாறு


மாதவியை எவ்வளவுதான் கற்பு நலம் போற்றும் காரிகையாக நாம் எண்ண முயன்றாலும் இந் நிகழ்ச்சி மனதில் மாசு உண்டாகச் செய்கிறது. அன்பால் அன்றி மாலை வாங்கும் பொருள் அளவால் கணவனைத் தேர்ந்தெடுக்கும் நிலையை நினைக்க வேண்டியுள்ளது. பின் மணிமேகலையை உதயகுமரன் அவள் விரும்பாவிடினும் தான் அடைய முயலும் நிகழ்ச்சியும் சங்க இலக்கியத்திற் காண முடியாத வாழ்க்கைக் காட்சியாகும். இரண்டு காப்பியங்களிலுமே பெண்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றார்கள். கண்ணகி, மாதவி, கவுந்தி அடிகள், மாதிரி, பாண்டியன் மாதேவி, மதுராபுரித் தெய்வம், வானவன் மாதேவி ஆகியோர்தம் சொல்லும் செயலுமே சிலப்பதிகாரக் காப்பியத்தின் பல திறப்பட்ட திருப்பு மையங்களாக அமைகின்றன. அவர் போன்றே மணிமேகலை, மாதவி, தீவதிலகை, காயசண்டிகை, சோழன் மாதேவி முதலிய மங்கை நல்லார் மணிமேகலைக் காப்பியத்தில் முக்கிய பங்குகள் கொள்ளுகின்றனர். இவை பெண்களுக்கு ஏற்றம் கொடுப்பதைக் காட்டுவதா அன்றிப் பெண் வழி மக்கள் ஒழுகினார்கள் என்பதைக் காட்டுவதா என்பதை ஆழ்ந்து காணல் வேண்டும்.

சமய நெறி:

சமய நெறியும் வழிபாட்டு முறையும் மிகக் குறுகிய காலத்தில் தமிழ் நாட்டில் மாற்றம் பெற்றன எனலாம். மாடலமறையோன் சிலப்பதிகாரத்தில் முக்கிய அங்கம் வகிப்பவன் என்பதைக் கண்டோம். அவன் கோவல கண்ணகியரை மதுரைக்குப் போகும் வழியில் காண்கின்றான். பின் பாவம் தீரப் புண்ணிய நதியாடக் கங்கைக்குச் சென்று அங்குச் செங்குட்டுவனைக் கண்டு சீக்கிரம் ஊர் திரும்பக் குறிப்பிடுகின்றான். பின் கண்ணகி விழாவுக்கு முன் செங்குட்டுவன் கொண்ட சீற்றத்தை அவன் வயது காட்டி அறமுரைத்து ஆற்றுகின்றான். இப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/162&oldid=1358107" இலிருந்து மீள்விக்கப்பட்டது