பக்கம்:தமிழக வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நில நூலும் வரலாறும்

51


யாளராய் நின்று, வையகம் வாழத் தாம் வாழும் தகையராய்ச் சிறந்து, நல்ல வளமார்ந்த அரிசிச் சோறும் கனிகளும் வந்த விருந்தினருக்கு அளித்து, சமுதாய வாழ்வையே செப்பம் செய்த பெருமை இந்த மருத நில மக்களுக்கு உரிய ஒன்றல்லவா! வற்றா வயல் வளத்தால் சுற்றத்தாரையும் மற்றவரையும் உண்பித்து, கூடி வாழும் செம்மை நெறியை உணர்த்தி, அதன்வழி உலக நாகரிக வாழ்வுகளையே உருவாக்கி வாழ்ந்து வரும் அம்மருதநிலப் பண்பும், வாழ்வும், வளமும் வரலாற்றின் அடிப்படைகளல்லவென்று யாரால் கூற முடியும்?

கடல் அடுத்த பகுதியே நெய்தல் நிலமாவது. அக் கடல் படு பொருள்களைக் கொண்டு தம் வயிறு ஓம்பி, நாட்டு வாணிப வளனையும் பெருக்கும் பரதவர்தம் வாழ்க்கை தமிழ்நாட்டு வரலாற்றில் ஒன்றிய வாழ்வாகுமே! கடல்மேல் கலம் செலுத்தி வாணிபம் புரியும் செல்வ நிலை ஒரு பக்கம் இருக்க, அக்கடல் விளை உப்புக்கும் மீனுக்கும் நாள் முழுதும் உழைத்து அலுக்கும் ஏழை மக்கள் வாழ்வும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது. அவர்களுடைய அன்றாட வாழ்வில் உருவாகிய சமுதாய வரலாறுகள்தாம் எத்தனை! நெய்தல் நில மக்கள் வாழ்வது ஒரு புறமிருக்க, அக்கடலை அடுத்து எத்தனை எத்தனை பெரு நகரங்கள் தோன்றி மறைந்துள்ளன! காவிரி கடலொடு கலக்கும் இடத்திருந்த பூம்புகார் இப்போது இல்லையானாலும் அதன் வரலாறு என்றும் தமிழ் நாட்டு வரலாற்றில் ஒளி விளக்காய் விளங்குமன்றோ, அது போன்றே கடற்கரையை அடுத்த முசிறியும், தொண்டியும், மாமல்லபுரமும், பிறநகரங்களும் வரலாற்று முக்கியம் வாய்ந்தவைதாமே! எனவே, இந்த நெய்தல் நிலப்பிரிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/53&oldid=1357274" இலிருந்து மீள்விக்கப்பட்டது