பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. ஊர்முது கோசரும்
அன்னி மிஞிலியும்

நாடோடி வாழ்வினராய், மேலைக் கடலைச் சார்ந்த, தம் துளுநாடு முதல், கீழக் கடலைச் சார்ந்த செல்லூர் நியமம் வரை அலைந்து திரிந்த கோசர் இறுதியில் அந் நாடோடி வாழ்க்கையை வெறுத்து நிலைத்த குடியினராய் வாழத் தொடங்கினர். வேளாண் தொழிலை விரும்பி தமக்கு உரிய தொழிலாகக் கொண்டனர். நிலத்தைப் புண்படுத்தி உழுது பயறு விளைத்திருந்தனர்.

ஒரு நாள் அக்கோசர் நிலத்தில், அன்னி மிஞலி என்பவளுடைய தந்தை மேய்த்து வந்த பசு ஒன்று புகுந்து பயறை மேய்ந்து விட்டது. அஃதறிந்த அவ்வூர் முதுகோசர் பெருஞ் சினம் கொண்டனர். அன்னி மிஞிலியின் தந்தை கண்களை அழித்துச் சிறுமை செய்தனர். முது கோசர் கொடுஞ் செயல் கண்டு கடுஞ்சினம் கொண்டாள் அன்னிமிஞிலி. “என் தந்தையின் கண்களைப் போக்கிய கோசரைப் பழி வாங்குவேன். அவர்களை அழிப்பேன்” என வஞ்சினம் உரைத்தாள்.

முதுகோசரை அழிக்கவல்ல திறன் கொண்டவன் அழுந்தூர் தலைவனாகிய திதியன் ஒருவன் தான் என்பதை அறிந்த அன்னி மிஞிலி அவன்பாற் சென்று தன் குறையுரைத்தாள். அன்னி மிஞிலியின் துயர் துடைக்க முன் வந்தான் திதியன். அவள் பொருட்டு அம் முதுகோசரை வென்றான். அன்னி மிஞ்லியின் தந்தைக்குக்

72