பக்கம்:தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்முகம்


பண்டைய காலந்தொட்டு இன்றுவரையில் முழுமை யான தமிழக வரலாறு ஒன்று தமிழ்மொழியில் வெளிவருவது இதுதான் முதன்முறையாகும். இந்நூலில் தமிழரின் பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வகுப்பில் படிக்கும் வரலாற்று மாணவர்களுக்கென வகுக்கப்பட்டுள்ள திட்டத்தின் அடிப்படையில். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் விருப்பப்படி எழுதப்பட்டுள்ளது. ஆயினும், தமிழகப் பல்கலைக்கழக எம்.ஏ.பட்டப் படிப்புக்கும் நூலகங்களுக்கும் பயன்படுமாறு இஃது அமைந்துள்ளது. அவ்வப்போது வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரைகளிலும், வரலாற்று ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ள தென்னிந்திய வரலாறு - களிலும் தமிழர் வரலாறும் பண்பாடும் இடம்பெற்றுள்ளன. எனினும், முழுநூல் வடிவத்தில் வரலாறு ஒன்று இதுவரையில் வெளிவரவில்லை. அக்குறையை இந்நூல் தீர்த்துவைக்கும் என்பது என் நம்பிக்கையாகும்.

தமிழகத்துக்கெனத் தனிப்பட்டதொரு நாகரிகமும் பண்பாடும் வளர்ந்து வந்துள்ளன. அவை கடல் கடந்து சென்று அயல் நாடுகளிலும் பரவியுள்ளன. எனவே, அவற்றின் சிறப்பை எடுத்து விளக்குவதை இந்நூலின் சீரிய குறிக்கோ ளாகக் கொண்டுள்ளேன். பழந்தமிழரின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டையும் அறிந்து கொள்வதற்குச் சங்க இலக்கியம் நமக்குப் பெரிதும் பயன்படுகின்றது. சங்க காலத் தமிழர் பண்பாடுகளே தமிழரின் வரலாறு முழுவதிலும் தொடர்ந்து வந்து அவர்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு அடிகோலி வந்துள்ளன. எனவே, அவற்றைப் பற்றிய ஆராய்ச்சியானது இந்நூலில் சற்று விரிவாகவே மேற்கொள்-