பக்கம்:தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முனைவர் சா. கிருட்டினமூர்த்தி
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை-600 113

பதிப்புரை

வரலாற்று அறிஞர் கே.கே.பிள்ளை அவர்களைத் தமிழுலகம் நன்கு அறியும். இலக்கியங்கள், கல்வெட்டுகள், ஆவணங்கள், அகழாய்வுப் பொருள்கள், வெளிநாட்டார் குறிப்புகள் போன்ற அடிப்படைச் சான்றுகளைக் கொண்டு நாட்டு வரலாற்றையும், மொழி வரலாற்றையும், இன வரலாற்றையும் பலரும் எழுதியுள்ளனர். அவ்வாறு எழுதிய அறிஞர் பலருள் கே.கே.பிள்ளை அவர்கள் குறிப்பிடத்தக்கவராவார். கால வரலாற்று அடிப்படையில் சமுதாய வரலாற்றைக் காண்பது ஒருவகையில் ஏற்புடையதாக இருந்தாலும் பிற ஆசிரியர்களினின்றும் கே.கே. பிள்ளை அவர்கள் வேறுபட்டு இந்நூலைப் படைத்துள்ளார் என்பது இந்நூலை நோக்குவார்க்கு நன்கு புலனாகும்.

'தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்' என்ற தலைப்பில் அமைந்த இந்நூல் தமிழக வரலாற்றைக் கூறுவதோடு, தமிழ்நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றையும் வெளிப்படுத்துகிறது. தான் எடுத்துக் கொண்டுள்ள நூல் தலைப்புக்கு ஏற்பப் பேராசிரியர் அவர்கள் நூலை அமைத்துக்கொண்டுள்ள முறை அழகுணர்ச்சியுடைய தாகவும் ஆய்வு முறைகளுக்கு உட்பட்டதாகவும் அமைந்துள்ளது.

20-ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றைக் கூறவந்த பேராசிரியர் அவர்கள், இந்நூலை 20 தலைப்புகளாகப் பகுத்துக் கொண்டது சிறப்புடையதாகும். குறிப்பாகக் கால அடிப்படையில் அமைத்துக்கொண்டிருப்பது குறிக்கத்தக்கதாகும்.