பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சி.என். அண்ணாதுரை பண்டு தொட்டு நிலவி வரும் சங்கீதம் கர்நாடக சங்கீதமாகும். ஆகையால் தமிழ்ப் பாடல்கள் பாடுவதால் கர்நாடக சங்கீதம் அழிந்துவிடும் என்பது தமிழரின் தன்மையை அறியாதவர் கூற்று. தியாகராஜ கீர்த்தனைகள் மறைந்து விடுமென்று கூறுவதும் தவறு. அவற்றையும் இசைவாணர்கள் பாடிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆதலால் கர்நாடக சங்கீதம் போய்விடும்; தியாகராஜ கீர்த்தனைகள் மறைந்துவிடும் என்று காரணங்கூறி, தமிழிசையை வளர்க்கும் முயற்சிக்குத் தடை செய்வது சிறிதும் அறிவுக்குப் பொருந்தாத செயலேயாகும். தமிழர்கள், தமிழின் உயிர்ப் பகுதியான இசைத் தமிழை வளர்க்கவே இம்முயற்சியில் தலையிட்டிருக்கின்றனர். இம்முயற்சி செட்டிநாட்டு அரசரின் அறச் சிந்தையாலும், நன்கொடையாலும் நிறைவேறத் தொடங்கியிருக்கிறது. இனி இம்முயற்சியைப் யாரும் தடுக்க முடியாது. இம்முயற்சியை பொதுமக்களும் ஆதரிக்கின்றனர்; இசைவாணர்களும் போற்றுகின்றனர்; தமிழன்பர்களும் பாராட்டுகின்றனர். ஆதலால் இசைத்தமிழ் இனி வளர்ச்சியடையும் என்பது உறுதி. அன்றியும், அண்ணாமலை மகாநாட்டின் முடிவு கண்டு சிலருக்கு ஆத்திரம் உண்டான காரணம் விளங்கவில்லை. அங்கு வேற்றுமொழிக்கோ, கலைக்கோ எதிரான முடிவு ஒன்றுமே செய்யப்படவில்லை. அங்கு கூடியிருந்தவர்களுக்கு அத்தகைய உணர்ச்சி, எண்ணம் சிறிதுகூட இருந்ததாகத் தெரியவில்லை. அண்ணாமலை மகாநாட்டுத் தீர்மானத்தில் 'தமிழ்ப் பாடல்களைப் பாடவேண்டும்' என்றுதான் தீர்மானம் செய்திருக்கின்றனர். தெலுங்குப் பாடல்கள் கூடாது; தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடக்கூடாது என்று சொல்லவில்லை. தெலுங்கின் மீதோ, தியாகராஜ கீர்த்தனத்தின் மீதோ எந்தத் தமிழன்பர்களுக்கும் தமிழிசைப் புலவர்களுக்கும் வெறுப்பில்லை; பகைமை இல்லை.