பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தினராய் இருக்கும் போதே,உடைவேல மரத்தின் முள்ளை,ஊகம்புல்லின் நுண்ணிய முனையிற் செருகிச் செய்து கொண்ட அம்பினை,வளாரை வளைத்துப் பண்ணிய வலிய வில்லில் வைத்துத் தம் மனைப்புறங்களில் விளைந்து கிடக்கும் பருத்திச் செடிகளின் வேரிடத்தை வாழ்விடமாகக் கொண்டு வாழும் காட்டெலிகளைக் குறிபார்த்துத் திரியும் காட்சியை ஆலத்தூர்கிழாரும் அழகுறத் தீட்டிக் காட்டுவது காண்க.

"வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்,
சிறியிலை உடையின் சுரையுடை வான்முன்
ஊக நுண்கோல் செறித்த அம்பின்
வலா அர் வல்வில் குலாவரக் கோலிப்
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்."

இவ்வாறு வண்டல் இழைத்து விளையாடும் இளம் பருவம் தொட்டே படைக்கலப் பயிற்சி யுடையவராய் வளர்ந்த அப் பண்டைப் படைமறவர்கள்,மாற்றார்.மீது போர் தொடுத்துச் செல்லும் முன் சில வஞ்சினம் உரைத்துச் செல்வதும்,அவ் வஞ்சினம் வழுவாவகையில் போராடி வெல்வதும் வழக்கமாம்.

பகையரசனுக்குரிய பெரிய கோட்டை யொன்றை முற்றி வளைத்திருந்தார்கள் சில மறவர்கள்.பொழுது புலர்ந்தது.நாட்காலையில், அரசன் திருக்கோயிலில் எழும் காலைமுரசின் ஒலி அரணகத்தே எழுந்தது. அது கேட்டான் முற்றியிருக்கும் படையின் தலைவன். 'நாம் ஈண்டு முற்றியிருப்பதை அறிந்தும் ஆண்டு முரசு முழங்குகிறதே. என்னே நம் ஆண்மை' என்ற குறிப்புத் தோன்ற ஆங்கு நின்ற வேற்படையாளரை நோக்கினான். அவ்வளவே, காலை உணவு உண்டாயிற்று. இனி, மாலை உணவுக்குள் மாற்றான் அரண் நமதாதல் வேண்டும். அதை வென்று கைக் கொள்ளா முன் உணவு உண்டல் கூடாது. மாலை உணவு