பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை 21 சியின் உருவமாக நாட்டுப் பாடல் குலசேகரனைச் சித்திரிக்கிறது. தமிழ்நாட்டு மரபின்படி கன்னட இளவரசி தனக்கு மணம் பேசிய மணமகன் இறந்ததும் வேறொருவரை மணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இறந்து விடுவதாகக் கதை சொல்லுகிறது. இக்கதை மனிதப் பண்பின் இரண்டு உயர்ந்த அம்சங்களை எடுத்துரைக்கிறது. அதற்குப் பிற்காலத்தில் தோன்றிய கதைகள், ராமப் பையன் அம்மானை, இரவிக்குட்டிப் பிள்ளை போர் முதலியன. இவற்றுள் முன்னையது ராமநாதபுரம் சேதுபதிக்கும் ராமப் பையனுக்கும் நடந்த போரை வருணிக்கிறது. இரவிக்குட்டிப் பிள்ளை போர் ராமப் பையனுக்கும், திருவனந்தபுரம் தளவாய் இரவிக்குட்டிப் பிள்ளைக்கும் நடந்த போரை வருணிக்கிறது. இவை இரண்டும் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தோன்றிய கதைகள் பல இருக்கலாம். மேற்கூறிய கதைகள் மூன்றும் முறையே திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் வழங்கி வந்தவை. மதுரை, திருச்சி மாவட்டங்களில் நாயக்கர் ஆட்சி கால நிகழ்ச்சிகளைப் பொருளாகக் கொண்ட கதைப் பாடல்கள் கிடைக்கலாம். மதுரைவீரன் கதை, வரலாற்றுப் பின்னணியில் எழுந்த கற்பனைக் கதையாகும். அவை போலல்லாமல் சரித்திர நிகழ்ச்சிக ளைப் பிரதான ஆதாரமாகக் கொண்ட கதைகள் கிடைக்கின்றனவா என்று தேடிப் பார்த்தல் அவசியம். நாயக்கர் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் முகலாயப் பேரரசை எதிர்த்து செஞ்சியின் சிற்றரசன் தேசிங்கு போராடினான். அவன் பத்து மாதங்கள்தான் ஆட்சி புரிந்தான். நீண்ட நாள் அரசாண்ட மன்னர்களின் பெயர் தன் மக்களின் மனத்தில் இடம் பெறாமல் போயின. ஆனால் பத்துமாதங்கள் ஆண்ட தேசிங்கின் பெயர் தெரியாதவர் தமிழ் நாட்டில் இல்லை. ஏன்? லட்சம் படை வீரர்களும், நானூறு பீரங்கிகளும் கொண்ட முகலாயர் படையை, முன்னுறு குதிரை வீரர்களைக் கொண்டு எதிர்த்தான் தேசிங்கு முகலாயப் படைத் தலைவன் சதகுத்துல்லாவைக் கொன்றுவிட்டான்; தானும் உயிர் நீத்தான். பணியாது போராடிய தேசிங்கின் நண்பன் ஒரு முஸ்லிம். அவன் நண்பனுக்காகத் தன் மதத்தினரை எதிர்த்தான்; அவனும் உயிர் நீத்தான். முரட்டு வீரமாயினும், தேசிங்கின் அஞ்சாமைக்குத் தமிழகம் தலை வணங்குகிறது.