பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

23


நாட்டில் பிரபலமானவை. இவை மணம்புரிந்து கொள்ளாத தேவியர். இவற்றை பயத்தோடுதான் மக்கள் வழிபட்டனர். இவை தமக்குக் கொடுக்க வேண்டியதைப் பக்தர்கள் தராவிட்டால் பெருந்துன்பம் விளைவிக்கக்கூடியவை என்று நம்பினார்கள். 'யக்ஷி' என்று சமணமதத்தவரது சாந்த தேவதை, பாமர மக்களின் இசக்கியாக மாறிவிட்டது. காளி, மாரி முதலியன வங்கத்திலிருந் தும், கருநாடகத்திலிருந்தும் பண்பாட்டுத் தொடர்பின் காரணமாக இங்கு குடியேறியவை. சக்கம்மாள், ராஜ கம்பள நாயக்கர்களது தெய்வம், கொத்துபல்லாரியிலிருந்து அவர்கள் வருகிற காலத்தில் அதனையும் கூடவே கொண்டு வந்து விட்டார்கள்.

தேவியரில் பல வேதக் கடவுளரோடு இணைப்புப்பெற்று விட்டன. காளி தனியாகவே வணங்கப்பட்டது. அது சைவ சமயத்தில் பார்வதியோடு சேர்ந்து ஒரு அம்சமாகிவிட்டது. பெரும்பாலும் பழமையான தேவதைகள் சிவனது மனைவிகளாக மாறிவிட்டன. ஆயினும் சிவன், விஷ்ணு கோயில்கள் இல்லாத சிறு கிராமங்களிலும் ஒரு தேவியின் கோயில் இருக்கும். இக்கோயிலுக்கு சிறப்பான நாட்களில் கொடை கொடுப்பார்கள். நவராத்திரியின்போது திருவிழாவும் நடைபெறும். சிறு கோயில்களில் ஒருநாள் மட்டுமே கொடை நடைபெறும்.

பாமர மக்கள் தேவி கோயில்களுக்கு வாசல் காவலர்கள் என்று மாடன் முதலிய தெய்வங்களை வணங்குகிறார்கள். ஆரம்பகாலத்தில் மாடன் முதலிய தெய்வங்களுக்கு உருவம் இல்லை. செங்கல்லால் கட்டப்பட்ட தூண் ஒன்றுதான் அத்தெய்வத்தைக் குறிக்கும். மாடன் முதலிய தெய்வங்கள், போரிலோ, கலகத்திலோ அல்லது சதிக்குள்ளாகியோ உயிர் விட்டவர்களது நினைவுச் சின்னங்களே. சின்னத்தம்பிக்கு, திருக்குறுங்குடி, பாப்பாக்குடி ஆகிய இடங்களில் கோயில்கள் இருக்கின்றன. அவை தனிக் கோயில்கள் அல்ல; பிற கோயில்களைச் சார்ந்தே இருக்கும். சுடலைமாடனுக்கு ஊர் தோறும் பல கோயில்கள் உண்டு. அவற்றில் உருவச் சிலைகள் இல்லை. சில தெய்வங்களுக்கு உருவச் சிலைகள் இருக்கின்றன. கருப்பசாமி, சங்கிலி பூதத்தான், முத்துப்பட்டன் ஆகிய தெய்வங்களுக்கு சிலைகள் உள்ளன. இவை பிற்காலத்தில் ஏற்பட்டவை.

மாடன் போன்ற தெய்வங்கள் சில குடும்பங்களுக்குக் குலதெய்வமாக இருக்கும். ஒன்று தெய்வமாகக் கருதப்படுகிற அம்மனிதனது வழிவந்தவர்களுக்கு அவன் குலதெய்வமாக இருக்