பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லறம்

குடும்ப வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டே தனது கணவனையும் மகிழ்விக்கும் ஒரு பெண்ணைப் புகழ்ந்து அவள் கணவன் பாடுகிறான்.குடும்ப வாழ்க்கையில் சலித்து விடாமல் சிரித்த முகத்தோடு தனது குடும்பத்தினருக்கு வேண்டிய எல்லா வேலைகளையும் செய்து விட்டுக் கணவனோடு,சிரித்துப் பேசிக் கொண்டே அவனைப் பராமரிக்கும் இப்பெண், இல்லற வாழ்க்கையின் தத்துவமறிந்தவள். வேலை, வேலை என்று சலித்துக் கொண்டு கணவனைக் கவனித்து அன்போடு பழகாத மனைவியர் பலர்.கணவனோடு நேரம் போக்கி,குடும்பப் பொறுப்பை கைநழுவவிடும் மனைவியர் பலர்.இவ்விரு வகையினரும், இல்லற வாழ்க்கையில் தோல்வியடைவார்கள். இப்பாடலில் வரும் பெண்ணோ கணவனால் புகழ் பாடப்படுவதுமின்றி குடும்பத்தினர் அனைவராலும் புகழப்படுகிறாள்.

அரிசி முளப் போட்டு அரமனையும் சுத்தி வந்தா அரிசி மண மணக்கும் அரமனையும் பூ மணக்கும் பருப்பு முளப் போட்டு பட்டணமும் சுத்தி வந்தா பருப்பு மண மணக்கும் பட்டணமும் பூ மணக்கும் வரிசை மணாளனோடு வாய் சிரித்துப் பேசி வந்தால் வாழ்க்கை நெய் மணக்கும் வாசநறும் பூ மணக்கும்

வட்டார வழக்கு:முளப்போட்டு முளைப்போட்டு.

உதவியவர்: இடம்

               காரிபாளையம் 

பழனியப்பன். சேலம் மாவட்டம் சேகரித்தவர்: கு.சின்னப்ப பாரதி A519 - 20