பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை 25 பாமரர் படைப்பிலேயே உணர்ச்சிமிக்க பாடல்கள் தாலாட் டும், ஒப்பாரியும் ஒன்று. வாழ்க்கையின் தொடக்கம் பற்றியது, மற்றொன்று முடிவு பற்றியது; ஒன்று தாயின் இன்பத்தை வெளியிடுவது. மற்றொன்று உறவினர் துன்பத்தை வெளியிடுவது. அப்பகுதிகளின் நீண்ட முன்னுரைகளில் இவ்வின்பமும், துன்பமும் சமூக வாழ்க்கையோடு தொடர்புடையவை என்பதைக் காட்ட முயன்றுள்ளேன். எனது முதல் தொகுப்பில் இருப்பவற்றைக் காட்டிலும் பலவகைப்பட்ட பாடல்கள் தொழில் என்ற துறையில் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. உப்பளம், மீன் பிடித்தல், ஆலை, தேயிலைத்தோட்டம், வண்டியோட்டுதல் முதலிய தொழில்களைப் பற்றிய பாடல்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லாப் பாடல்களிலும் தொழிலும், காதலும் இணைந்தே காணப்படுகின்றன. காதல் பகுதியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அழகான பாடல்கள் காணப்படுகின்றன. நெல்லை மாவட்டப் பாடல்கள் மட்டுமே சென்ற தொகுப்பில் இருந்தன. பிறவகைப் பாடல்களை விடக்காதல் பாடல்களே பெரிதும் கிடைக்கின்றன. தமிழ்நாடு காதலை மறந்து விடவில்லை என்று தோன்றுகிறது. உழைக்கும் இளைஞரும் இளநங்கையரும் வயலிலும், பருத்திக் காட்டிலும், தேயிலைத் தோட்டங்களிலும், ரோடு வேலை செய்யும்போதும், மலைச்சாரலில் விறகு வெட்டும்போதும் கூடிப் பழகுகிறார்கள். எனவே வீட்டிலடைப்பட்டுக் கிடக்கும் உயர்ந்த வர்க்கப் பெண்களை விட, இளைஞர்களை அறிந்து காதல் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டு. ஆனால் சாதிப் பிரிவினைகளும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் அவர்கள் இல்லற வாழ்க்கைக்குத் தடையாக உள்ளன. ஒரு ஜாதியினருக்குள்ளேயே மணமுறை வழக்கங்கள் காதல், கற்பு மணமாக முடிவதற்குத் தடையாக நிற்கின்றன. ஆயினும் இத்தடைகளை மீறி மனித உணர்வு சிற்சில சமயங்களில் வெற்றி பெறுகிறது. சங்க காலத்து குறிஞ்சி நிலக் களவொழுக்க மரபுகளை இன்னும் பாமரர் நாட்டுப் பாடல்களில் காண்கிறோம். பாமர மக்களின் குடும்ப வாழ்க்கை சமூக வாழ்க்கைக்குட்பட்டது. ஆணும் பெண்ணும் உழைத்தும் அவசியத் தேவைகளுக்குப் பணம் இல்லாத ஏழ்மை நிலையில்தான் அவர்கள் வாழ்கிறார்கள்.