பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்பகத்தார் உரை

தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறையில் தமக்கெனவோர் இடத்தை நிலை நிறுத்திக் கொண்டவர் பேராசிரியர் நா.வானமாமலை. இத்துறையில் அவரது பணிகளில் சிறப்பானது 'தமிழர் நாட்டுப் பாடல்கள்" எனும் இந்நூலாகும். 1964 இல் வெளியான இதன் முதற்பதிப்பும், 1977 இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பும் மக்களின் பேராதரவைப் பெற்றன. நீண்டகால இடைவெளிக்குப் பிறகு இம் மூன்றாம் பதிப்பை அழகாக ஆப்செட் முறையில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்,

இத்தருணத்தில் இத்தொகுப்பைக் குறித்துச் சில செய்திகளைக் குறிப்பிட விரும்புகிறோம். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் அப்பாடலைச் சேகரித்தவரின் பெயரும், அப்பாடல் வழங்கும் பகுதியும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அடுத்து, இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல் களை வகைப்படுத்திய முறை குறிப்பிடத்தக்கதாகும். தமிழக நாட்டார் பாடல்களை வகைப்படுத்துவது குறித்த சிந்தனையைத் தொடங்கி வைத்த பெருமை இந்நூலுக்கு உண்டு.

மேலும், சமூகவியல் - மானிடவியல், வரலாறு போன்ற பல்வேறு அறிவியல் துறைகளின் துணையுடன் பாடல்களுக்கு பேராசிரியர் எழுதியுள்ள குறிப்புகள் முக்கியமானவை ஆகும். நாட்டார் பாடல்களை சமுதாயக் கண்ணோட்டத்தோடு அணுகும் முறையை இத்தொகுப்பு அறிமுகப்படுத்தியது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நூலினை மீண்டும் தமிழக மக்களுக்கு வழங்குவதில் பெருமை அடைகிறோம்.

பதிப்பகத்தார்