பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

543 தமிழர் நாட்டுப் பாடல்கள் மதுரையும் சேலத்தையும் . மாட்டிப் பிணைக்கும் வண்டி எங்கூடப் பிறந்த மார்க்கண்டன்ஒட்டும் வண்டி மங்கைக்குச் சேதமின்னும் மதுரைக்கு ஆள் போனா மதுரை புரண்டு வரும் மாப்புழுதி ஆடி வரும் மார்கண்டன் ஓடிவரும்-இப்போ மதுரை நகரிழந்தேன் மார்கண்டன் மாரிழந்தேன் செஞ்சியையும் சேலத்தையும் சேர்த்துப் பிணைக்கும் வண்டி என்னுடன் பிறந்த சிறுத் தொண்டன் ஒட்டும் வண்டி செல்விக்குச் சேதமின்னும் செஞ்சுக்கு ஆள் போனா செஞ்சி புரண்டு வரும் செம்புழுதி ஆடி வரும் என்னுடன் பிறந்த சிறுத் தொண்டன் கோடி வரும்-இப்போ செஞ்சி நகரிழந்தேன் சிறுத் தொண்ட மாரிழந்தேன். குறிப்பு: மார்கண்டர்-சிரஞ்சீவி. அண்ணனும் சிரஞ்சீவியாக இருப்பான் என்று தங்கை நம்பியிருந்தாள். மார்கண்டன் அவனது இயற்பெயராக இருக்காது. ஒப்பாரிக்கு என்று தங்கை தேர்ந்தெடுத்துக் கொண்ட பெயரேயாம். சிறுத்தொண்ட நாயனார் சிவனடியாருக்காக குழந்தையை அறுத்துக் கறி வைத்துப் படைத்தார். ஆனால் சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான் குழந்தையை மறுபடியும் உயிர்ப்பித்துக் கொடுத்தார். அவளுடைய அண்ணன் அப்படி உயிர் பெற்று வருவானோ? உதவியவர்: இடம்: கவிஞர் சடையப்பன் அரூர், சேலம் மாவட்டம்