பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதி, மனிதன் வருங்காலத்தில் இன்ப நிலை பெறுவான் என்று கூறுமிடத்தில் எல்லாம் இன்ப நிலையை அமர நிலையென்றே கூறுகிறார். இராமலிங்கரும் மனிதர் வானவர் ஆவார்கள் என்று நம்பினார்.

‘மலங் கழித்து உலகவர் வானவாரயினர்
வலம் பெறு சுத்த சன்மார்க்கம் சிறந்தது.
பலம் பெரு மனிதர்கள் பண்புளராயினர்
என்னுளத்து அருட் பெருஞ் சோதியார் எய்தவே.

அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக்
கொண்டன ஓங்கின குறை யெலாத் தீர்ந்தன.
பண்டங்கள் பலித்தன பரிந்தென் னுள்ளத்தில்
எண்டரும் அருட் பெருஞ் சோதியர் எய்தவே.

மதித்த சமய வழக் கெல்லா மாய்ந்தது.
வருணாச் சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசாரக் கொதிப் பெலாம் ஒழிந்தது.
கொலையும், களவும் மற்றைப் புலையும் அழிந்தது.

இத்தகைய உலகம் தோன்ற வேண்டுமென இராமலிங்கர் கனவு காண்கிறார்.

சாதி சமய சண்டைகள் மலிந்திருந்த காலத்தில் இராமலிங்கர் அவற்றை எதிர்த்துச் சாடி சமரசத்தைப் போதித்தார். ஏழை எளியவருக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு மனம் குமுறி அவற்றை நீக்கத் தமக்கு வலிமையளிக்க நடராஜனை வேண்டினார். பாரதியின் ‘வல்லமை தாராயோ?’ என்ற வேண்டுகோள் இக்கருத்தினடியாகப் பிறந்த தென்றே தோன்றுகிறது. போர் ஒழிந்து அமைதி நிலவ வேண்டுமென வள்ளலார் விரும்பினார். மக்கள் துயர் தீர்ந்து இன்பமுற்றுவாழ வேண்டும் என்று விரும்பினார், உலகம் வாழத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் நல்லவர்களின் உள்ளமே கோயில் என்றும், அவர்கள் வழியைப் பின்பற்றுவதே சன்மார்க்கம் என்றும் நமக்குப் போதித்தார், இதனைக் கண்டு பாரதியார் இராமலிங்கத்தைத் தமது ஆசானாக ஏற்றுக் கொண்டார். கருத்துக்களில் மட்டுமின்றி பாட்டு உருவங்களில் கூட

103