பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விஞ்ஞானக் கட்டுரைகளில் வெளியிடவென்றே வெளிவந்த கலைக் கதிர் இப்பொழுது கதைகளையும், வேறுபலவகைக் கட்டுரைகளையும் வெளியிடுகிறது. விஞ்ஞானக் கட்டுரைகள் போதுமான அளவு கிடைக்காதது இதற்குக் காரணமா அல்லது முழுதும் விஞ்ஞானக் கட்டுரைகள் அடங்கிய ஒரு மாத பத்திரிகை தமிழ் நாட்டுக்கு அவசியமில்லை என்பது நிர்வாகிகள் கருத்தா என்று எனக்குத் தெரியவில்லை. முன்னது காரணமாக இருந்தால் சிறிது முயன்றால் கட்டுரைகள் கிடைக்கும். இரண்டாவது காரணமாக இருந்தால் நிர்வாகிகள் தமிழ்நாட்டு மக்களின் அறிவுத் தரத்தைக் குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

உண்மையில் தமிழ்நாட்டில், எளிய முறையில் மக்களுக்கு விஞ்ஞான உண்மைகளையும், கருத்துக்களையும் பரப்ப, பல்வேறு விதமான பத்திரிகைகள் வேண்டும். அவை ‘அணுச் சிதைவின் வரலாறு’, ‘மூலப்பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டதன் கதை’,‘விஞ்ஞான அதிசயங்கள்’, ‘பயனுள்ள பொருள்களைத் தயாரிக்கும் முறைகள்’. ‘விஞ்ஞானிகளின் சரித்திரங்கள்’, ‘வியாதிகள்’, ‘உடல் கூறு அதிசயங்கள்’, ‘தரை இயல் விஞ்ஞானம்’, ‘வான இயல்’ போன்ற பல தலைப்புகளில் தொடர்ச்சியான கட்டுரைகள் தாங்கி வெளிவர வேண்டும். இலக்கியக் கலாச்சாரப் பத்திரிகைகளும், விஞ்ஞானத்துக்குச் சிறிது இடம் ஒதுக்க வேண்டும்.

சிறு வயதிலேயே விஞ்ஞான ஆர்வம் ஏற்படுத்த, அமெரிக்காவிலும், சோவியத் நாட்டிலும் பல புதிய நூல்கள் வெளியிடுகிறார்கள். முன்பு காக்காய், குரங்கு, நாய்க் கதைகளும், ‘ராஜா ராணி’க் கதைகளும், குழந்தைகளுக்காக அச்சிடப்படும். இப்பொழுது உயிர் நூல் உண்மைகளை ஆதாரமாகக் கொண்ட கதைகளும், விஞ்ஞானப் புதுமைகளை ஆதாரமாகக் கொண்ட அழகிய படங்கள் கொண்ட நூல்களும், சிறுவர்களுக்காக அச்சிடப்படுகின்றன. அத்தகைய நூல்கள் நமக்கும் தேவை. வருங்கால சந்ததியில் விஞ்ஞானிகள் தோன்ற வேண்டுமானால் சிறு வயதில் அவர்கள் மனத்தில் விஞ்ஞான ஆர்வம் தோன்ற வேண்டும். விஞ்ஞான கற்பனைக் கதைகள் இத்தகைய ஆர்வத்தைத் தோற்றுவிக்கும். தமிழில்

65