பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

தமிழர் வரலாறு

வலிந்து இயற்றப்பட்ட, சமஸ்கிருத, தமிழ்ப்பாக்கள் எழுவதற்கு மிக மிக முற்பட்ட காலத்தில் இருந்த, கலப்பற்ற, தூய, பழைய இலக்கிய மரபுகள், மக்களின் இயற்கையோடியைந்த உண்மையான பழக்க வழக்க ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டனவாம். தொடக்கத்தில் பாணர்கள் வானம்பாடிகளைப் போலத், தங்களை மறந்து பாடினர். அவர் பாக்கள், அக்கால மக்கள் நடத்திய வாழ்க்கையினை உள்ளது உள்ளவாறே காட்டும் உண்மையான காலக் கண்ணாடியாக இருந்தன. பழைய இலக்கிய மரபுகளைத் தோற்றுவித்த வாழ்க்கை முறைகள் வேறுபட்டு, பாக்களின் கற்பனைப் பொருள்களெல்லாம் வெறும் இலக்கிய மரபுகளாகிவிட்ட நிலையிலும், பிற்காலப் பாவலர்கள், பழங்காலத்தைச் சேர்ந்த, வழிவழி வந்த இலக்கியக் கற்பனைகளை விடாமல் மேற்கொண்டு வருகின்றனர். உதாரணத்திற்குப் பண்டை நாள்களில் கால்நடைகளே மக்களின் செல்வமாக அமைந்தன. இனத்தலைவர்கள், ஒருவர், பிறிதொருவர் கால் நடையைக் களவாடும் போது, அத் தலைவர்களுக்கிடையே போர்கள் எழுந்தன. ஆகவே, பகைவரின் கால் நடைகளைக் களவாடும் போது, அத்தலைவர்களுக்கிடையே போர்கள் நிகழ்ந்தன. ஆகவே, பகைவரின் கால்நடைகளைக் களவாடுவதில் போர் தொடங்குவதாகப் பாடல் புனைவது, மனித வரலாற்றின் வளர்ச்சி நிலையில், ஒரு கட்டத்து உண்மை நிலைகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. பிற்காலத்தில், போருக்கு வேறு பல காரணங்களும் உருவாகி விட்டன. ஆனால், இலக்கிய மரபோ, பாவலனைப், போர்களின் பாறாத் தொடக்கமாக, தொடக்ககால ஆனினை கவர்தலையே பாட வைக்கிறது. அவ்வாறே, கி. பி. ஆறாவது நூற்றாண்டில், வலிந்து பாடப்பெறும் தமிழ்ப் பாடல்கள் தோன்றிவிட்ட காலத்திற்கு முன்வரையும் பிற்காலப் பாடல்களில், காதல், போர் பற்றிய இரு வகைப் பாடல்களை இயற்றுவதை எண்ணில் அடங்கா இலக்கிய இலக்கண விதிமுறைகள், விடாப்பிடியாக முறைப்படுத்தி வந்துள்ளன.