பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

339


பிற்காலத்தவர் ஒருவரால் எழுதப்பட்டது என்பது உறுதி செய்யப்படும். இந்த 329 பாக்களும், இறையனார் அகப் பொருள் சூத்திரங்கள் விளக்கும் முறையிலான காதல் நிகழ்ச்சிகளை உணர்த்துவதற்காக அல்லாமல், பிற்கால இலக்கண நூல்கள் விளக்கும் முறைகளை விளக்கவே எடுத்தாளப்பட்டுள்ளன. அப்பாக்கள் கூறும் பாட்டுடைத் தலைவன், கி. பி. 750 இல் அரியணை ஏறிய, வேள்விக்குடி செப்பேடு வழங்கியவனின், தந்தையின் பாட்டனாகிய அரிகேசரி பராங்குசன் ஆவன்! அரிகேசரி ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவனாவன். ஆகவே, இப்பாண்டியன் புகழ்பாடும் பாக்களை மேற்கோள் காட்டும் உரையின், காலமேல்வரம்பு, ஏழாம் நூற்றாண்டின் முடிவோ, அல்லது எட்டாம் நூற்றாண்டின் தொடக்கமோ ஆதல் வேண்டும். அதன் காலக் கடை வரம்பு, அகப்பொருள் உரைகளிலிருந்து எடுத்துக்காட்டுக்களை, முதன் முதலில் சான்று காட்டும் பேராசிரியரின் காலமாக இருக்கத்தகும் 13 ஆம் நூற்றாண்டு ஆகும். (தொல், பொருள் . மரபியல் , 94. பேராசிரியர் உரை காண்க.)

முச்சங்கப் பழங்கதை :

இறையனார் அகப்பொருள் உரையாசிரியர், ஒருவர் தாம் முச்சங்கங்கள் பற்றிக் கூறியுள்ளார். அது வருமாறு : "தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் இரீஇயினார் பாண்டியர் அவருள், தலைச்சங்கம் இருந்தார், அகத்தியனாரும், தி ரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐந்நூற்று நாற்பத்து ஒன்பதின்மர் என்பது அவருள்ளிட்டு நாலாயிரத்து நானுற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களால் பாடப்பட்டன எத் துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும் களரியாவிரையும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானுாற்று நாற்பதிற்றியாண்டு சங்கம் இருந்தார் என்பது,