பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

385


பெருஞ்சோற்றுதியன் சேரலாதனையும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும் பாடியிருப்பதன் மூலம் சேர நாட்டையும், சோழன் பணித்த களிறுபிடி முயற்சியில் கலந்துகொள்ளாத எழினியை வென்று, அவன் பல்லைக் கொணர்ந்து பதிக்கப்பெற்ற கதவுகளைக் கொண்ட வெண்மணி வாயிலைச் சிறப்பித்தன் மூலம் சோழ நாட்டையும், பாண்டியர்க்கு வெற்றி சேர்க்கும் களிற்றுப்படை, பொருளும் புகழும் சேர்க்கும் கொற்கை முத்தையும் பாராட்டியிருப்பதன்மூலம் பாண்டி நாட்டையும், அதியன், அதியமான், ஆவி, எருமை, நன்னன் ஆகியோரைப் பாராட்டியிருப்பதன் மூலம் தமிழகத்துப் பிற பகுதிகளையும் அறிந்து கொண்டதோடு, வேங்கடத்துக்கு அப்பாலதான மொழி பெயர் தேயத்துக் கட்டி, பாணன், புல்லி ஆகியோரை அறிந்திருந்தமையால், தமிழகத்து வடவெல்லைப் பகுதிகளையும், கங்கைக்கரைக்கண்ணதான பாடலியில் பெரும் பொருளை ஒளித்து வைத்த நந்தர் செயலையும், மலையிடைப் பாறைகளைப் பிளந்து வழி வகுத்துக்கொண்டு நெடிய தேர்ப் படையோடு தென்னாட்டின் மீது போர் தொடுத்து வந்த மோரியர் செயலையும் கூறியிருப்பதால், கங்கைக் கரை நாடுகளையும் அறிந்து வைத்திருக்கும் மாமூலனார், கன்னி முதல், கங்கை வரை சென்று வந்தவரே.

தமிழகம் முழுவதும் சென்று பார்த்தவர், இந்நால்வர் மட்டுமே அல்லர் ; இவர்களைப் போல் தமிழ்நாடு முழுவதும் சென்று பார்க்கவில்லை எனினும், தமிழகத்தின் ஒரு பகுதி யிலிருந்து பிறிதொரு பகுதிக்குச் சென்றுவந்த புலவர் பலராவர். அவர்களுள் ஒரு சிலரை ஈண்டு நினைவு கூர்தல் பொருந்தும்.

மதுரை மாவட்டத்தைச் சார்ந்த இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங்கவுசிகனார், வடார்க்காடு மாவட்டம் செங்கம் வட்டத்து நன்னன் சேய் நன்னனைப் பாராட்டி மலைபடுகடாம் பாடியுள்ளார்-

த.வ-25