பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

400 தமிழர் வரலாறு

தம்முடைய ஒரே பாட்டில், நிரலே வைத்துப் பாராட்டும், நிலையில், சேரர் தலைநகரை, வருபுனல் வாயில் வஞ்சி: (50) என்றும், சோழர் தலைநகரை, 'ஓடாப்பூட்கை உறந்தை' (83) என்றும் கூறிப் பாராட்டிய, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத் தனார், பாண்டியர் தலைநகரைப் பாராட்டுமிடத்து மட்டும், 'தமிழ் நிலைபெற்ற தாங்கரும் மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை' (67) என, மதுரையின் தமிழ் மணம் பரப்பும் பெருமையினைப் பாராட்டியிருப்பதும் காண்க. இதனால், தம் காலப் புலவர்களுக்குப் பரிசு அளித்துப் புரப்பதில், மூவேந்தர்களும் ஒன்றுபட்டே இருந்தனர்; அதேபோல், மூவேந்தர்களைப் பாராட்டுவதில், புலவர்களும் ஒன்றுபட்டே இருந்தனர் என்றாலும், அப்புலவர்களை ஒன்றுகூட்டித் தமிழ் வளர்த்தது மதுரை மட்டுமே; புலவர்கள் ஒன்று கூடியிருந்து தமிழ் ஆராய மதுரையை மட்டுமே தேர்ந்தெடுத்தனர் என்பது தெளிவாகிறது.

மதுரையில், தமிழ்ப்புலவர் பேரவை இருந்து, தமிழாராய்ந்து வந்துளது என்பதற்கு இவை போலும் சிறு சிறு தொடர்களாம் அகச்சான்றுகளே அல்லாமல், அப்பேரவை இருந்தமையினை நிலைநாட்டும் வலுவான, தெளிவான அகச்சான்றுகளும் இல்லாமல் போய்விடவில்லை.

மதுரையின் ஒரு பகுதியாகவே கருதப்படும் முருகன் கோயில் கொண்டிருக்கும் திருப்பரங்குன்றத்தைத் தம்முடைய அகப்பாட்டு ஒன்றில் (59) 'சின மிகு முருகன் தண்பரங் குன்றம்' எனக் குறிப்பிட்டுள்ளமையாலும், தம் பெயருக்கு முன்னர்த் தம் தந்தையின் பெயரையும், அப்பெயருக்கு முன்னர், மதுரையின் பெயரையும் இணைத்துக்கொண்டு, மதுரை மருதன் இளநாகனார் எனப் பெயர் சூட்டிக் கொண்டிருப்பதாலும், மதுரையில் நிலைத்த குடியினராவர் என்பதை உறுதி செய்துவிட்ட மதுரை மருதன் இளநாகனார். அவர்களே, கலித்தொகையில் ஓரிடத்தில் (மருதக்கலி : 2 : 2-5), வையை ஆற்றின் பெருவெள்ளத்தால் மோதப்