பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

தமிழர் வரலாறு


புறநானூறு 173 ஆம் எண் பாட்டின் கொளு, "சிறுகுடி கிழான் பண்ணனைச் சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது" என்கிறது. பாட்டு கூறுவது இது :- "என் வாழ்நாளையும், தன் வாழ்நாளோடு கொண்டு இன்னன் நெடிது வாழ்வானாக பாணர்காள் ! இப்பரிசிலனது சுற்றத்தின் வறுமைக் கொடுமையைக் காணுங்கள். புதிது புதிதாகப் பழங்களை ஈன்றிருக்கும் மரத்தின்கண், பறவைக் கூட்டம் எழுப்பும் பேரொலிபோல, பண்ணன் அட்டிற் சாலையில் உணவு உண்பார் எழுப்பும் பேரொலியும், கேட்கத் தான் செய்கிறது. காலம் தப்பா மழை பெய்யும் காலத்தை எதிர்பார்த்திருந்து, தம்முட்டைகளைக் கல்வியவாறே மேட்டு நிலம் நோக்கி வரிசை வரிசையாகச் செல்லும் எறும்புக் கூட்டம்போல, பண்ணன் அட்டிற்சாலையில் பெற்ற சோறு நிறைந்த தட்டேந்திய கையினராய், இளம் சிறார்கள், தங்கள் உறவினரோடு வரிசை வரிசையாகச் செல்வதையும் பார்க்கத்தான் செய்கிறோம். அதனால் பண்ணன் இல்லம் அணித்தாகிவிட்டது என்பதையும் அறிந்துள்ளோம். இருந்தும், பசிக்கொடுமையால், மனம் விதுப்புற, எதிர்ப்படுவாரையெல்லாம் அணிகி, பசி தீர்க்கும் மருத்துவனாம் பண்ணன் இல்லம், அண்மையில் உள்ளதா ? இன்னமும் சேய்மைக்கண் உள்ளதா சொல்லுங்கள், சொல்லுங்கள்" எனக் கேட்கலாயினோம்";

"யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர்! காண்கு, இவன் கடும்பினது இடும்பை:
யாணர்ப் பழுமரம் புள் இமிழ்ந்தன்ன
ஊண் ஒலி அரவம் தானும் கேட்டும்;
போய்யா எழலி பெய்விடம் நோக்கி
முட்டைகொண்டு வன்புலம் சேரும்
இறுதுண் எறும்பின் சில்ஒழுக்கு ஏய்ப்பச்
சோறுடைக் கையர், வீறு வீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்கும்; கண்டும்
மற்றும் மற்றும் வினவுதும்; தெற்றெனப்