உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழர் வீரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணை நாட்டுப் பெருவீரர் 63 கொன்றான் காரி, கொல்லிமலையைக் கைக் கொண்டான்; அதற்கு உரிமையுடைய சேரமானிடம் ஒப்புவித்தான். அன்று முதல் சேரமானும் மலையமானும் சிறந்த நண்பராயினர். உரிமை வேட்கை வில்லாளருள் வல்லாளனாகிய ஓரியை முடித்த வீரன் என்று எல்லோரும் காரியைப் பாராட்டினார்கள். அப் புகழுரை கேட்டு மகிழ்ந்த காரி தன் நாட்டில் சுதந்தரத்தை நிலைநாட்ட விரும்பினான். அவன் முன்னோர் சோழ குல மன்னர்க்குத் திறை செலுத்தும் சிற்றரசராக வாழ்ந்திருந்தனர். முடிசூடி அரசாளும் உரிமை அவர்க்கு இருந்ததில்லை. அந்த நிலையை மாற்ற ஆசைப்பட்டான் காரி. மலையமான் நாடு தன்னரசு பெற்ற தனி நாடாதல் வேண்டும் என்பது அவன் வேட்கை சிற்றரசர்களில் சிலர் அவன் கருத்தை ஆதரித்தனர். திருக்கோவலூரில் முடிசூடி அரசாளத் துணிந்தான் அவ்வீரன். முடிசூட்டு விழா முடிசூட்டு விழாவிற்குரிய வேலைகள் முறையாக நடந்தன. திருக்கோவலூர் புத்துயிர் பெற்றாற்போல் பொலிவுற்றது. வீடுதோறும் சுதையின் விளக்கம்: வீடுதோறும் மங்கல முழக்கம்; மாடம் எங்கும் மணிக் கொடிகள்; மேடை எங்கும் ஆடல் பாடல். பெண்ணை யாற்றங்கரையில் அழகுற அமைந்த அரண்மனை கண்ணுக்கு இனிய காட்சியளித்தது. இன்னிசையாளர் ஒருபால்: நல்லிசை வீரர் ஒருபால்; குறுநில மன்னர் ஒருபால்; பெருநிலத் தலைவர் ஒருபால், மயிலினம் போன்ற மங்கையர் ஒருபால். இவ்வாறு நல்லாரும் வல்லாரும் அணியணியாக அமர்ந்திருந்த மன்றத்தின் நடுவே நின்றது ஒர் அரியாசனம். அதன்மீது வீர சிங்கம்போல் வீற்றிருந்தான் மலையமான் காரி. மங்கல வாத்தியம் முழங்க, குலமாதர் குரவையிட, பாவலர் பல்லாண்டு பாட, குடிகளின் சார்பாகப் பெண்ணை நாட்டுப் பெரியார் ஒருவர் மலையமானுக்கு மணிமுடி சூட்டினார். அன்றுதொட்டு மலையமான் திருமுடிக்காரி என்னும் சிறப்புப் பெயர் தாங்கி அவன் அரசு வீற்றிருந்தான். §

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/65&oldid=868511" இலிருந்து மீள்விக்கப்பட்டது