பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு

3


மூவேந்தர் காலத்திற்குப் பின்பு நம் தாய் மொழிக்கு நேர்ந்த சிறுமையை நினைத்தால் நெஞ்சம் உருகும். வேற்றரசர் ஆட்சி இந்நாட்டில் வேரூன்றிற்று. அவர் மொழியாகிய ஆங்கிலம் ஆதிக்கம் பெற்றது. எல்லாப் பாடங்களும் ஆங்கில மொழியிலே பயிற்றப்பட்டன. ஆங்கில மாது களிநடம் புரிந்த கல்விச் சாலைகளில் தமிழ்த்தாய் நிலை யிழந்து, தலை கவிழ்ந்து, ஒடுங்கி, ஒதுங்கி நிற்பாளாயினாள். தமிழ் ஆசிரியர்களின் உள்ளம் இடிந்தது; ஊக்கம் மடிந்தது. புகைபடிந்த ஒவியம்போல் புலவர் மணிகள் பொலிவிழந்தார்கள். தமிழ் மாணவர்களும் தமிழை எள்ளி நகையாடத் தொடங்கினர்; அல்லும் பகலும் ஆங்கிலத்தைக் கற்று, ஆங்கிலேயருடைய நடையுடைகளில் மோகமுற்று, தாய்மொழியைப் பழித்தும் இழித்தும் பேசுவாராயினர். இவ்வாறு, கட்டழிந்து பதங் குலைந்து கிடந்த தமிழ் நாட்டில் தமிழ்க்கலை விளக்கம் அவிந்து போகாமல் பாதுகாத்தவர் தமிழாசிரியர்களே யாவர். மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, அருமையும் கருதாது, அவமதிப்பும் கொள்ளாது, அன்று தமிழ்த்தாயின் பொன்னடி போற்றிநின்ற தமிழாசிரியரை இன்று மறக்கலாகுமோ?

'ஆங்கில ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கல்வி முறை இந்நாட்டு முன்னேற்றத்திற்கு ஏற்ற தன்று: அதனை மாற்றியே தீரவேண்டும்' என்று இப்போது நல்லறிஞர் எல்லோரும் ஒன்றுபட்டுக் கூறுகின்றார்கள். இனி வருகின்ற தமிழரசில் கலைகள் எல்லாம் தமிழ் மொழியின் வாயிலாகவே பயிற்றப்படும் என்பது திண்ணம். அந்த முயற்சியில் கல்வி அமைச்சர் ஈடுபட்டிருக்கின்றார். இப்பொழுது அவர் வகுத்துள்ள