பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழியும் நெறியும்

175


என்பது இவர் திருப்பாட்டு. ஐந்து தொழிலும் விளங்க ஆண்டவன் ஆனந்தக் கூத்தாடும் தில்லைச் சிற்றம்பலமே சைவ உலகத்தில் கோயில் என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆகவே, அழகிய திருக் கூத்தாடி ஆன்மாக்களை ஈடேற்றும் குறிப்புடைய நடராஜ வடிவத்தை நமக்குத் தந்தது சைவ சித்தாந்தம்.

சைவ சமயத்தில் ஆலய வழிபாடு இன்றியமையாததாகக் கொள்ளப்படுகிறது. 'ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே' என்று சிவஞான போதம் என்னும் சித்தாந்த நூல் கூறும். கோயில் இல்லா ஊரில் குடியிருத்தல் ஆகாது என்பது சைவர் கொள்கை. இதனால், எண்ணிறந்த சிவாலயங்கள் தமிழ்நாடெங்கும் தலையெடுத்து நிற்கின்றன. பொருள் வளம் பெற்ற அரசரும், அருள் நலம் பெற்ற முனிவரும் ஆலயப் பணியில் ஈடுபட்டார்கள்: தேவாரம் முதலிய தெய்வப் பாடல்களை ஆலயங்களில் இன்னிசையோடு பாடுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். பாடலோடு ஆடலும் நிகழ் வதாயிற்று. இவ்வண்ணம், பெரிய கோயில்களில் எல்லாம் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் செழித்தோங்கி வளர்ந்தன. கடவுளுக்குரிய கோயில் கலைக் கோயிலாகவும் காட்சியளித்தது.

இப்பொழுது தமிழ் நாட்டிலுள்ள சிவாலயங்களில் சாதி வேற்றுமை காணப்படுகின்றது. ஆண்டவன் கோயிலுக்குள்ளே சில சாதியார் செல்லலாகாது என்று சொல்லப்படுகிறது. கோயிலுக்குள்ளே சென்றாலும் இன்னார் இன்ன இடத்தில் நிற்க வேண்டும் என்ற வரையறை ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், சைவ