பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. தமிழ்த் திருநாள்[1]

தலைமையுரை

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக இன்று இலங்கையில் தமிழ்த் திருவிழா நடைபெறுகின்றது. இது நான்காம் தமிழ் விழா. முதல் ஆண்டிலே தமிழ் விழா மதுரையம்பதியில் நடைபெற்றது. மதுரை மாநகரம் பாண்டி நாட்டின் தலைநகரம்; செந்தமிழை உருவாக்கிய திருநகரம். இத்தகைய மதுரை மாநகரம் முதலாண்டு விழாவினை நடத்தியது மிகப் பொருத்த மாயிருந்தது. அடுத்த ஆண்டு விழா சோழநாட்டின் பழந் தலைநகராகிய திருவாரூரில் நிகழ்ந்தது. சோழ வளநாட்டின் செழுமைக்கு ஏற்ற முறையில் எடுப்பாக நடந்தது அம்மகாநாடு. மூன்றாம் மகாநாடு பண்டைச் சேரநாட்டின் ஒர் அங்கமாக விளங்கிய கொங்கு நாட்டிலே சீரும் சிறப்பும் உற்று விளங்கும் கோயம்புத்தூரில் நடைபெற்றது. நான்காம் மகாநாடு யாழ்ப் பாணத்தில் நடைபெறுகின்றது. இம் மகாநாட்டின் இலக்கியப் பகுதியில் என்னையும் பங்கு பெறுமாறு பணித்த அன்பர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கம் உரியதாகும்.


  1. தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக யாழ்ப்பாணத்தில் 30-4-1951-இல் நடைபெற்றது. நான்காம் தமிழ்த் திருநாள்.