பக்கம்:தமிழின எழுச்சி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

116 - தமிழின எழுச்சி

ஆகியோர் முகாமையானவர்கள். இவர்கள் படித்த கட்டுரைகளில் கூறப் பெறும் கருத்துகள் வியப்பானவையும் வேடிக்கையானவையும் ஆகும். மகாபாரதத்தில் திரௌபதியின் தன்தேர்வுமணம் (சுயம்வரம்) நடைபெற்ற பொழுதும், இராமாயணத்தில் இராமனின் முடிசூட்டு விழாவின்பொழுதும், முறையே அவற்றுக்குத் தென்னாட்டிலிருந்து சேர, சோழ, பாண்டியர்கள் வந்திருந்தனர் என்று வியாசரும், வால்மீகியும் எழுதியுள்ளனராம். சேர, சோழ, பாண்டியர்கள் தென்னாட்டு அரசர்களாம். எனவே இதில் கூறப்பட்ட செய்திகள் எதுவும் பொய்யாக இருக்க முடியாது; முற்றிலும் உண்மையே என்பது இவர்கள் முடிபு. அதேபோல், இப்பொழுதுள்ள புராணக்கதைகளில் பெயர்கள் குறிக்கப் பெற்ற பரீக்சித்து, செனமேசெயா முதலிய அரசர்ககளும் உண்மையாகவே, ஆண்ட அரசர்களே என்று கூறி, அவர்களின் காலத்தை யெல்லாம் தம் மனம்போன போக்கில் கணக்கிட்டு வரையறுத்துக் கொடுத்துள்ளனர். இது தொடர்பான முந்தைய மேலைய வரலாற்று ஆசிரியர்களின் ஆரிய கருத்துகளையெல்லாம் புறக்கணித்துப் புறந்தள்ளி, அவை இந்தியரைப் பிரித்தாளுகின்ற சூழ்ச்சியில் எழுதப் பெற்றவை என்று இக்கட்டுரையாளர் நால்வரும் அடித்துத் தள்ளி யிருக்கின்றனர்.

மகாபாரதத்தில் உள்ள கிருட்டிணர் பிறந்த பிறப்புக் குறிப்புகளையும், இராமாயணத்தில் இராமர் பிறந்த பிறப்புக் குறிப்புகளையும் கொண்டு அவற்றின் காலத்தை, கி.மு. 4100 என்றும் கி.மு. 3100 என்றும் வரையறுத்திருப்பதுடன், அவற்றில் கூறப்பெறும் அனைத்துச் செய்திகளும் முற்றும் உண்மையே என்றும் முடிவு செய்கின்றனர், இவ்வரலாற்று மேதைகள். அநுமன் இந்தியாவை விட்டு இலங்கை சேர்ந்தது, இராவணனைப் பார்த்தது, திரும்பியது; பின் இராமன் புறப்பட்டது, போர் நடந்தது, இராவணனை வெற்றி கொண்டது; பின் அயோத்திக்குத் திரும்பி முடிசூட்டிக் கொண்டது ஆகிய எல்லா நிகழ்ச்சிகளையும் நடந்த ஆண்டு, மாதம், நாள், மணி ஆகியவற்றுடன் மிகவும் துல்லியமாக நேரில் பார்த்தவர்கள் போல் இவர்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். இவற்றுக் கிடையில் தமிழ்மொழி கி.மு. 8000 ஆண்டில் தோன்றியது என்று கூறி, அதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னமேயே, அஃதாவது கி.மு. 10000 இலேயே சமசுக்கிருதம் தோன்றிவிட்டது என்றும், வாயடி வழக்காக எல்லாரும் நம்பும்படியாக நன்கு புளுகியிருக்கின்றனர்.

இனி, இவர்தம் கண்டுபிடிப்புக் கருத்துகளை யெல்லாம் உண்மையான வரலாறு என்றும், இவற்றை இந்திய வரலாற்றில் இணைக்க வேண்டும் என்றும், இப்பொழுதுள்ள இந்திய வரலாறெல்லாம் மேல்நாட்டு அறிஞர்கள் கூறிய பொய் வரலாறுகள், கற்பனைகள் என்றும்,