பக்கம்:தமிழின எழுச்சி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

134 - தமிழின எழுச்சி

மாநாட்டின் செயற்குழுக் கூட்டத்தில் குமரிமுனையில் திருவள்ளுவரின் முழு உருவச் சிலையை நிறுவுதல் வேண்டும் என்ற தீர்மானம் உருப்பெற்றது. அதை முறையாக அரசிடம் எடுத்துச் சொல்லிச் செயற்படுத்த, குமரிமுனையில் திருவள்ளுவர் சிலையமைப்புக் குழு, என்பதாக ஒரு குழுவும் அமைக்கப் பெற்றது. அக்குழுவின் தலைவராகத் தவத்திரு. குன்றக்குடியடிகளாரும், செயலராக, நாமும் அமர்த்தப் பெற்றோம். ஆனால், அத்தீர்மானம் ஏனோ மாநாட்டில் நிறைவேற்றப்படவில்லை. அக்குழுவின் அமைப்பும் ஏனோ தவிர்ந்துபோனது. அவ்வாறு அதற்கென அமையவிருந்த கட்டுக்கோப்பான ஓரமைப்பு தவிர்ந்து போனாலும், அவ்வெண்ணம் தளர்ந்து போகாமல், அதன் முன்னும் பின்னும் வழக்கம்போல் நாம் பேசும் திருக்குறள் கூட்டங்களில் அக்கருத்துபற்றிப் பலகாலும் பேசினோம்; பேசிக் கொண்டும் வருகிறோம். அதுபோலவே தவத்திரு.அடிகளாரும் அவ்வப்பொழுது அக்கருத்தைப் பலவிடங்களிலும் வலியுறுத்திப் பேசி வந்துள்ளதாக அறிகிறோம். இவ்வாறு குமரிமுனையில் அமைய வேண்டிய சிலையமைப்புக் கருத்து இன்னும் முழு அளவில் வலியுறுத்தப் பெறாமலேயே இருந்து வருகிறது.

ஆனாலும், கலைஞர் காலத்திலேயே, இக்கருத்தை எவ்வாறேனும் செயலுக்கு கொண்டு வந்து விட வேண்டும் எனும் எண்ணத்தில், கலைஞர் அவர்கள், இதற்கென ஓர் ஆய்வுக் குழுவும், திட்டக் குழுவும் அமைத்தார்கள் என்றும், அக் குழுக்களும் தம்தம் குறிக்கோளின்படி, விவேகானந்தர் பாறைக்கு மேற்கே ஒரு பாறையைத் தேர்ந்தெடுத்துத் திருவள்ளுவர் சிலை யமைப்பதற்கான ஒரு திட்டத்தையும் வடிவப்படுத்திக் கொடுத்தன என்றும், ஆனால், அதன்பின்னர் அமைந்த ம.கோ. இரா. அவர்களின் ஆட்சி அத்திட்டதையே படிப்படியாக முடக்கிவிட்ட தென்றும், பின்னர் ஒருகால் அத்திட்டம் பற்றி, நம் முதலைமைச்சரிடம் நினைவூட்டப் பெற்றபொழுது, 'நான் ஆட்சியில் இருக்கும்வரை, திருவள்ளுவர்க்குக் குமரிமுனையில், விவேகானந்தர் சிலைக்குப் போட்டியாக ஒரு சிலையமைப்பதை நடக்க விடமாட்டேன்' என்று அழுத்தந் திருத்தமாகத் தெரிவித்ததாகவும், அதன் பின்னர் அதுபற்றிய பேச்சே எழவில்லை என்றும், குமரி மாவட்டத்தில் உள்ள மூத்த அன்பர்கள் சிலர் நம்மிடம் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தனர். அதன்பின்னரே நாம் குமரிமுனை சென்று, விவேகானந்தர் சிலையும் மண்டபமும் அமைந்த பாறையையும், திருவள்ளுவர் சிலையை அமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப் பெற்றிருந்த பாறையையும் கண்டு வந்தோம்.