பக்கம்:தமிழின எழுச்சி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

158 - தமிழின எழுச்சி

என்பது, வடவர்க்கும், பார்ப்பனீயத்திற்கும் ஏற்கனவே தத்தம் சிந்தனை கள், செயல்கள் ஆகியவற்றை அடகு வைத்து விட்டு, அடிமைப்பட்டுப் போன தந்நலக்காரர்களின் கூற்று. இவ்விரண்டுங் கெட்டான்களின் அடிமைக் கொள்கையால், அத் தேசியக் கங்காணிகளுக்கே நன்மையாகு மன்றி, தமிழின மக்களுக்கு என்றைக்கும் ஓர் எள்ளளவும் நன்மையோ முன்னேற்றமோ கிடைக்கப் போவதில்லை.

அடுத்தபடி, பொதுவுடைமை என்னும் ஓர் உண்மையான இன முன்னேற்ற மெய்ம்மைக் கொள்கையின் பெயரால் போலித்தனமான அரசியல் குமுகாய நடவடிக்கைகளை மேற்கொண்டு, உருசியாவுக்கும் போகாமல், சீனாவுக்கும் செல்லாமல், இடையில் காலிலேயே விழுந்து கிடக்கும் சாதி மதவுணர்வுகள் சாகா வரங்கொண்ட பொக்கைப் பொதுவுடைமைக் காரர்களால் தமிழினத்திற்கோ, தமிழ்நாட்டுக்கோ எவ்வகை விளைவும் எக்காலத்திலும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இத்தகையவர்களின் பேச்சுக்கோ செயலுக்கோ எவ்வகைத் தொடர்புமில்லை. இந்த உலகம் உள்ளமட்டும் இவர்கள் நின்று கொண்டிருக்கும் குழப்ப மேடையில் இருந்து இவர்கள் அகலப் போவதுமில்லை . இவர்களுக்கு ஒரு தேசிய இன உரிமை என்பதிலேயே தெளிவான கருத்து இல்லை. 'புதிய தேசியம்' என்னும் மாய்மாலக் கோட்டைக்குள் புகுந்து கொண்ட இவர்கள் வெளிவருவது கடினம்.

இனி, இவர்களையும் தவிர்த்து, இங்குள்ள சிலர் காலத்தால் இயங்கிய காந்தியின் பெயராலும், கருமமே கண்ணாகக் கொண்ட காமராசரின் உழைப்பாலும், பேராய வெள்ளையடித்துக் கொண்டு அவ்வப்பொழுது, தமிழ் என்று வாய்ச் சிலம்பமாடுவதும், தமிழர்கள் என்று கைக்கம்பு வீசுவதுமாக, வெள்ளை ஊர்திகளில் பலர் வந்து, தங்களின் சாதிக் கோட்டையின் வலிவானவர்களுக்குப் பின்னால் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களால் இந்நாட்டில் ஊர்ந்து கொண்டிருக்கும் ஒரு சிற்றெறும்புக்கும் ஒரு சிறு அளவினும் நன்மை பில்லை. இவர்கள் அள்ளிக் கொடுக்கும் காசுக்கு அங்காந்து திரியும் சாதிச் சாரணர்களே இவர்களின் ஐந்தாம் படைத் தொண்டர்கள்! இவர் களின் ஆரவாரக் கூப்பாடுகளில் இத் தலைவர்கள் மெய்மயங்கிக் கிடப்பதே இவர்களின் வாழ்க்கை. இவர்களின் பொய் மயங்கிய போலி உரைகள், இவர்கள் ஊரைவிட்டுப் போனதும், வெறும் குப்பைக் காற்றாகச் செயலிழந்து போவதை அனைவரும் கண்டிருக்கலாம். இவர்களால் தமிழும், தமிழினமும் ஓர் இம்மி அளவாகிலும் முன்னேறும் என்பது ஊமையன் கண்ட ஒரு நொடிக் கனவே ஆகும்.