பக்கம்:தமிழின எழுச்சி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

34 - தமிழின எழுச்சி

உணர்ந்தாரால் தமிழ் மருத்துவத்தின் பெருமை ஒருவாறு தேரப்பெறும். நாட்டுப்புறங்களில் மட்டுமே இம் மருத்துவம் இன்னும் தங்கி வாழ்வதாலும், நம் நாட்டுக்கே யுரிய முறையாதலாலும் இது நாட்டு மருத்துவம் என்றும் வழங்கப்பெற்று வருகின்றது.

முதுமை முற்றும் மறைந்து இளமை கொப்பளித்த முனிவர் ஒருவரைப்பற்றியும் அவர் கண்ட ஓர் அரிய வேரைப் பற்றியும், பின் அதை இழக்க நேர்ந்து வருந்தியதைப் பற்றியும் உரைக்கும் ஓர் அரிய செய்தி கொங்குமண்டலச் சதகச் செய்யுளொன்றினால் அறியப் பெறுகின்றது. தேரையர் என்னும் மருத்துவச் சித்தர் ஒருவர், ஓர் அரசன் மண்டை யோட்டில் தங்கிய தேரையொன்றினை, அம் மண்டை யோட்டைத் திறந்து வெளிப்படுத்தியதும் பின் அதன் கரணியமாக அவர் அப் பெயர் பெற்றதும் வழிவழியாய்க் கேட்கும் மெய்ச் செய்தியே! தேரையரின் மாணவரும் 'வைத்திய சிந்தாமணி' போன்ற பல மருத்துவ நூல்களின் ஆசிரியருமான யூகிமுனிவர், வீரசுண்ணம் என்பதோர் அரிய மருந்தினை உண்பித்துக் கருங்காக்கை யொன்றின் நிறத்தை முற்றும் வெள்ளிய நிறமாக மாற்றினார் என்ற செய்தி மருத்துவ நூலுள் கூறப்பெறுகின்றது. இவைபோலும் பண்டைச் செவிவழிச் செய்திகளேயன்றி, இன்றும் நேரில் கண்டுணர்ந்த அரிய செய்திகளும் ஆயிரக்கணக்கில் ஆங்காங்கே சொல்லப்பெற்று வருகின்றன. இன்னும், ஆங்கில மருத்துவரால் கைவிடப்பெற்ற பல கொடு நோய்களைக் குணப்படுத்தி வரும் சிறந்த சித்த மருத்துவர் சிலரும், அவர்களை யறிந்த பலரும், அம் மருத்துவத்தால் குணம்பெற்ற நோயாளிகள் மிகப் பலரும் இருந்துதாம் வருகின்றனர். இவர்கள் அத்தனையர்தம் மருத்துவ அறிவுபற்றியும் அவர்தம் அரும்பெரும் செயல்கள் பற்றியும் இங்கெழுதப் புகுந்தால் இக்கட்டுரை மிகவும் நீண்டதொரு நூலாகவே விரியும்.

இன்னும்,

‘நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்
அம்புபோல் உடம்பினர்'

- எனவரும் பதிற்றுப்பத்தின் (42 : 4-5) பாட்டடி, பண்டைத் தமிழ் மருத்துவர்கள் அறுவை மருத்துவத்திலும் திறம் பெற்றிருந்ததை உணர்த்தும்.

இனி, தமிழ்ச் சித்த மருத்துவத்தின் அடியொற்றியதும் ஆயுர்வேதம் என்று கூறப்பெறுவதுமான ஆரிய மருத்துவத்தில், அம் மருத்துவத்தின்