பக்கம்:தமிழின எழுச்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
தேவநேயப் பாவாணரின் திருக்குறள்
தமிழ் மரபுரையின் சிறப்புகள்!
(பரமக்குடி உ.த.க. மாநாட்டில்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஆற்றிய உரை)


பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தலைவர் அவர்களே! பெருமைக்குரிய தமிழ்த்தலைவர் பாவாணர் அவர்களே! பர்.இலக்குவனார் அவர்களே! பேராசிரியர் சொக்கப்பனார் அவர்களே! புலவர் குழந்தை அவர்களே! தமிழன்பர்களே! தாய்மார்களே!

உங்கள் எல்லார்க்கும் என்னுடைய தலைதாழ்ந்த வணக்கங்கள். இந்தச் சொற்பொழிவு இந்த மாநாட்டின் இறுதிச் சொற்பொழிவு. பலவகையான கருத்துகளை இந்த இரண்டு நாட்களிலும் கேட்டிருப்பீர்கள். பல உங்களுக்கு உடன்பாடாக இருக்கும்; பல மறுப்புக்குரியனவாக இருக்கலாம்.

நான் சில செய்திகளை இன்றியமையாத நிலையிலே சொல்ல விரும்பினேன். நேரம் மிகக் கடந்துவிட்டது; அதனால் சொல்லவந்த செய்திகளை விடுத்து, சொல்லவேண்டிய சில செய்திகளைச் சொல்லி விட்டு என்னுடைய உரையை முடித்துக்கொள்ளலாம் என்று இருக்கின்றேன்.

பாவேந்தர் பாரதிதாசனார், உங்களுக்குத் தெரிந்திருக்கும்; மிகவும் கண்டிப்பானவர்; அதாவது அவருடைய வீட்டில் அன்று; வெளியிலும் அன்று; தமிழ் என்ற நிலையிலே அவரைவிடக் கண்டிப்ப ஒருவரை-ஓர் உள்ளத்தை நான் பார்த்ததில்லை. அவரிடத்திலே