உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தமிழியக்கம்

அறநிலையக் காப்புக்கே
    அரசினர்கள் அயலாரை
        அமைப்பர்! அன்னோர்
பிறமொழிக்குத் துணைநின்றும்
    தமிழ்மொழியின் பீடழிக்கும்
        செயல் புரிந்தும்,
சிறுமையுறு வடமொழிக்குக்
    கழகங்கள் இங்கமைத்தும்
        தீமை செய்வார்!
உறுதியுடன் தமிழரெலாம்
    ஒன்றுபட்டால் எவ்வெதிர்ப்பும்
        ஒழிந்து போகும்! 64

நாட்டிலுறும் அறநிலையம்
    ஒவ்வொன்றும் நற்றமிழ்க்கல்
        லூரி ஒன்றும்,
வீட்டிலுறு கழகங்கள்
    நாலைந்தும், மேன்மையுறும்
        புலவர் கூடித்
தீட்டிநூல் வெளியீடு
    செய்நிலையம் ஒன்றுமாய்த்
        தருமேல் நம்மை
வாட்டிவரும் வறுமைநிலை
    மாய்க்கவரும் தாழ்மைநிலை
        மாய்ந்து போமே. 65