இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28
தமிழியக்கம்
மானந்தான் மறைந்ததுவோ?
விழாத்தலைவீர், மணமெல்லாம்
வடசொல் லாலே
ஆனவையா சொல்லிடுவீர்!
அந்நாளில் தமிழர்மணம்
தமிழ்ச்சொல் லாலே
ஆனதென அறியீரோ?
பார்ப்பனன்போய் அடிவைத்த
வீட்டி லெல்லாம்
ஊனந்தான் அல்லாமல்
உயர்வென்ன கண்டுவிட்டார்
இந்நாள் மட்டும்? 69
மணமக்கள் தமைத் தமிழர்
வாழ்க என வாழ்த்துமொரு
வண் தமிழ்க்கே
இணையாகப் பார்ப்பான்சொல்
வடமொழியா, தமிழர்செவிக்
கின்பம் ஊட்டும்?
பணமிக்க தலைவர்களே,
பழியேற்க வேண்டாம்நீர்!
திரும ணத்தில்
மணமக்கள், இல்லறத்தை
மாத்தமிழால் தொடங்கிடுக;
மல்கம் இன்பம்! 70