உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழியக்கம்



௧. நெஞ்சு பதைக்கும் நிலை

கரும்புதந்த தீஞ்சாறே,
    கனிதந்த நறுஞ்சுளையே,
        கவின்செய் முல்லை
அரும்புதந்த வெண்ணகையே
    அணிதந்த செந்தமிழே
        அன்பே, கட்டி
இரும்புதந்த நெஞ்சுடையார்
    துறைதோறும் நின்னெழிலை
        ஈட ழித்து
வரும்புதுமை நினைக்கையிலே
    நெஞ்சுபதைக் கும்சொல்ல
        வாய்ப தைக்கும்.1

எடுத்துமகிழ் இளங்குழந்தாய்,
    இசைத்துமகிழ் நல்யாழே,
        இங்குள் ளோர்வாய்
மடுத்துமகிழ் நறுந்தேனே,
    வரைந்துமகிழ் ஓவியமே,
        அன்பே, வன்பு
தொடுத்துமகிழ் நெஞ்சுடையார்
    துறைதோறும் நின்னெழிலைத்
        தோன்றா வண்ணம்
தடுத்துவரல் நினைக்கையிலே
    நெஞ்சுபதைக் கும்சாற்ற
        வாய்ப தைக்கும்.2