பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

295


வந்தோம் என்று ஜம்பமடிக்கும் எழுத்தாளர் கோஷ்டி கலை கலைக்காகவே என்று அப்பண்டிதர் பல்லவியையே வேறு இராகத்தில் பாடுகிறது. தமிழைச் சிறைமீட்ட பாரதியார் செய்த சேவையே பாரதியின் இலட்சியமும்’

கலை கலைக்காகவே என்று கூறி மொழி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் கலைஞர்களுக்கெதிராகவும்— ஏகாதிபத்தியத்துக்கெதிராகவும்—பாசிசத்துக்கெதிராகவும்— முதலாளித்துவத்துக்கு எதிராகவும் குரல் எழுப்பப் பாட்டாளி வர்க்கத் துணையுடன் பொதுவுடைமைச் சமுதாயத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிய முதல் தமிழ் ஏடு பாரதிதான் என்று இலங்கை எழுத்தாளர்கள் கருதுகிறார்கள்.

1946 ஜனவரியில் தோன்றிய ’பாரதி’ ஆகஸ்ட் முடிய உள்ள எட்டு மாதங்களில் ஐந்து இதழ்கள்தான் கொண்டுவர முடிந்தது. அதன் ஆறாவது இதழ் 1948 ஜனவரியில் பிரசுரம் பெற்றது. அதுவே பாரதியின் இறுதி இதழாகவும் அமைந்தது.

முற்போக்கு இலக்கிய இதழாக ஆரம்பித்து, இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் சமமான இடம் அளித்து வந்த பாரதி, மூன்றாவது இதழுக்குப் பிறகு இலக்கியப் பகுதிகளைக் குறைத்துக் கொண்டு ஒரு அரசியல் ஏடு ஆகவே மாறிவிட்டது.

இலக்கியவாதிகளின் ஆதரவையும் பெறாமல், அரசியல்வாதிகளின் பக்கபலத்தையும் பெற முடியாமல், ’பாரதி’ தன் வரலாற்றை முடித்துக் கொண்டது.

முற்போக்கு இலக்கிய ஏடுகள் என்று சொல்லிக் கொண்டு இலங்கையில் அவ்வப்போது சிறு பத்திரிகைகள் வந்திருக்கின்றன. அவை சிறிது காலமே உயிர் வாழ்ந்துள்ளன.

நாவலாசிரியர் இளங்கீரனை ஆசிரியராகக் கொண்டு 1960 களில் ‘மரகதம்’ என்றொரு பத்திரிகை வந்தது.

1968—ல் மருதூர்வாணன் ஆசிரியராக இருந்து ’தேன்மதி’ என்ற பத்திரிகையை நடத்தினார். இளம் எழுத்தாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் அரங்கமாக அது விளங்கியது. ’கலைக் கூடல்’ என்ற அமைப்பையும் உருவாக்கி எழுத்தாளர்கள் சந்தித்து உரையாடிப் பழகுவதற்கும் அது ஏற்பாடு செய்தது.